ஆனந்தவிகடன் குழுமத்தின் மீது சினிமா தயாரிப்பாளர் புகார்

0
180
ஒரு படம் என்பது பலருடைய கடின உழைப்பு, பண முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் விமர்சனம் செய்து, படக்குழுவினருக்கும் தயாரிப்பாளருக்கு கடும் மன உளைச்சலை உண்டாக்குவார்கள். படங்களை விமர்சனம் செய்யலாம் தவறில்லை, அது எல்லை மீறிப் போகும் தான் சிக்கல் உண்டாகிறது. அப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது ‘தீதும் நன்றும்’ திரைப்படம்.

ராசு ரஞ்சித் இயக்கத்தில் அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், ஈசன், இன்பா உள்ளிட்ட பலருடைய நடிப்பில் மார்ச் 12-ம் தேதி வெளியான படம் ‘தீதும் நன்றும்’. சார்லஸ் இம்மானுவேல் தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் மீதிருந்த நம்பிக்கையால் மார்ச் 9-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேக காட்சி திரையிட்டோம். அதில் பங்கேற்ற பல பத்திரிகையாளர்கள் நிறைகள், குறைகள் என அனைத்தையுமே சுட்டிக் காட்டினார்கள். அவை அனைத்திலுமே எங்களுக்கு உடன்பாடு இருந்தது. பத்திரிகையாளர்களும் நல்லவிதமாக விமர்சனம் எழுதவே, மார்ச் 12-ம் தேதி வெளியான படத்துக்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கூட்டம் இருந்தது. திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் படக்குழுவினருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வந்தார்கள்.

அந்தச் சமயத்தில் தான் எங்களுக்கு வந்தது ஒரு பேரதிர்ச்சி. மிகப்பெரிய பத்திரிகை குழுமமான விகடன் குழுமத்தின் சினிமா விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் எங்களுடைய படத்துக்கு விமர்சனம் செய்திருந்தார்கள். அவர்கள் விமர்சனம் செய்ததில் தவறில்லை. ஆனால், அதில் மிகவும் தரக்குறைவாகப் பேசியிருந்தார்கள். படத்தில் எந்தவொரு நிறையுமே இல்லை என்பது போல வெறும் குறைகளை மட்டுமே பேசியிருந்தார்கள். அதிலும் படத்தை ரொம்ப மட்டந்தட்டிக் கூறியிருக்கிறார்கள். அந்த விமர்சனத்தின் இறுதியில் திரையரங்குகளுக்குச் சென்று ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று பேசியிருப்பது காலத்தின் கொடுமை என்பதைத் தாண்டி வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

இந்த விமர்சனத்தின் மூலம் எங்கள் படத்துக்கு வர வேண்டிய கூட்டத்தையே தடுத்திருக்கிறார்கள். அதிலும், விமர்சனத்தில் 5 ஆண்டுகள் பழைய படம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை எங்கேயாவது நிரூபிக்க முடியுமா? 2018-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட படம் எப்படி 5 ஆண்டுகள் பழைய படமாகும். எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி பழைய படம், திரையரங்கிற்குப் போகாதீர்கள் என்றெல்லாம் பேசி எங்கள் படத்துக்கு வர வேண்டிய கூட்டத்தையே தடுத்திருக்கிறார்கள்.

இதனால் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டமாகியுள்ளது. மேலும் இயக்குநருக்கு மிகப்பெரிய மன உளைச்சல் உண்டாகி இருக்கிறது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விகடன் குழுமத்தின் மீது புகார் அளித்திருக்கிறோம். இது தொடர்பான நகலை இத்துடன் இணைத்துள்ளோம். தமிழகத்தின் மிகப்பெரிய பத்திரிகை குழுமம் இப்படியான ஒரு விஷயத்தைச் செய்திருப்பது, எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களும் முன்பு பல படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். அவர்களே ஒரு தயாரிப்பாளரின் வலி அறியாமல் இப்படி பொய்யாகப் பேசி, ஆதாரமற்று கூறியிருப்பது தான் காலத்தின் கொடூரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here