அவள் பெயர் ரஜினி – சினிமா விமர்சனம்

படத்தின் துவக்கத்தில் நடக்கும் ஒரு மர்மமான கொலை; அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா..? இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்தக் கொலையா…? என்பதில் இருக்கும் குழப்பம்… இவைகளுக்கு விடை தேடிச் செல்லும் நாயகனின் பயணமே  “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் கதை.

நாயகனின் சகோதரியும், அவரது கணவரும்  செல்லும் கார் நெடுஞ்சாலையில்  பெட்ரோல் இல்லாமல் நின்று போகிறது.

தன் மனைவியை காரில் விட்டுவிட்டு நாயகனின் மாமா பெட்ரோல் வாங்கச் செல்கிறார். அப்பொழுது அந்த விபரீதம் நடக்கிறது.

என்ன நடக்கிறது என்று தெளிந்து சுதாரிப்பதற்கு முன்பே அங்கு ஒரு கொலை விழுகிறது. நாயகனின் தமக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

அவளைப் பார்க்க வரும் நாயகனின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.
ஒருபுறம் போலீஸ் கொலை தொடர்பான சாட்சியங்களை விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கப் பார்க்க, இன்னொருபுறம் நாயகன் இந்த கொலையை செய்தவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார்.

அந்த முயற்சியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழத் துவங்க, நாயகனின் குடும்பம் மீது அடுத்தடுத்து தாக்குதலும்

நடக்கத் துவங்குகிறது.

தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டே நாயகன் அந்தக் கொலை குற்றவாளியை கண்டுபிடித்தாரா..? அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

நவீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராமிற்கு தன் அக்காளாக வரும் நமீதா ப்ரமோத்தின் இன்றைய நிலையை நினைத்து கலங்கி, அவளின் மனசாந்திக்காக அந்தக் கொலையின் பின்னணியை தேடிக் கண்டு பிடிப்பது மட்டுமே வேலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் இந்த வழக்கை விசாரிக்க இன்ஸ்பெக்டர் பால் தலைமையில் ஒரு தனிக் குழு செயல்பட்டு வந்தாலும்கூட, வழக்கு தொடர்பான சின்ன சின்ன தடயங்களை கண்டுபிடிப்பதும், அந்த தடயங்களை நூல் பிடித்தபடிச் சென்று குற்றவாளியை கண்டுபிடிப்பதும் கதாநாயகன் காளிதாஸ்தான்.

காளிதாஸ் சொல்வதைக் கேட்டு கொண்டு, அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பின்னால் வந்து நிற்கும் வேலையை மட்டுமே போலீஸ் இப்படத்தில் செய்கிறது.

மையக் கதைக்கும் நாயகனுக்கும் படத்தில் தொடர்பே இல்லை. மையக் கதையோடு தொடர்புபடுவது நாயகனின் அக்காள், அக்காள் கணவர் மற்றும் அந்தக் குற்றவாளி.

இப்படி நாயகன் கதைக் கரு மற்றும் கதையின் வீரியத்தில் பங்கேற்காமல், வெறும் துப்பறியும் பணியை மட்டுமே செய்யும் கதாபாத்திரத்தை எப்படி காளிதாஸ் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.

அக்காவாக நடித்திருக்கும் நமீதா ப்ரமோத் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக போலீஸ் விசாரணையின்போது அவரின் அழுகையும், உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அதிஅற்புதம்.

திரைப்படத்தின் வசீகர கதாபாத்திரம் என்றால், அது ஆட்டோ ஓட்டுநராக வரும் கருணாகரன் கதாபாத்திரம்தான்.
படத்தில் ஆங்காங்கே நாம் சிரிக்கின்றோம் என்றால் அதன் காரணகர்த்தா கருணாகரனே.
அதிலும் குறிப்பாக போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரின் செல்போனில் கால் அட்டெண்ட் செய்து பேசுவது, குற்றவாளியின் அங்க அடையாளங்களை படம் வரைவதற்காக கேட்டால், இடுப்பழகை வர்ணிப்பது என்று வரும் கொஞ்ச நேரத்தில் கலகலப்பூட்டி செல்கிறார்.ரஜினியாக நடித்திருக்கும் லஷ்மி கோபாலசாமி நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய கதாபாத்திர வார்ப்பு ஒட்டு மொத்த கதையிலும் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.

இந்தக் கொலை ஏன் நடந்தது என்பது தொடர்பாக விவரிக்கப்படும் அந்த பின்கதையில் லஷ்மி கோபாலசாமியின் நடிப்பு நம்மை கலங்கச் செய்கிறது.

அந்தப் பின் கதையும் இவர் மீது என்ன குற்றம் என்பதான கேள்வியை நம்மில் எழுப்பிச் செல்கிறது.போலீஸ் அதிகாரியாக வரும் அஸ்வின் குமார் மேற்சொன்னபடி நாயகன் கொடுக்கும் தடயங்களைப் பெற்றுக் கொண்டு, கடைசி நேரங்களில் நாயகனுக்கு வந்து பந்தோபஸ்து கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்.

நாயகியாக வரும் ரெபோ மோனிகா ஜானுக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் கூட இல்லை. ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் போல் வந்து செல்கிறார்.

அக்காவின் கணவராக வரும் ஷாஜி குரூப் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், தன் இயல்பான நடிப்பினால் நம் மனதில் நிற்கிறார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஒருவராக ரமேஷ் கண்ணா வந்து செல்கிறார். சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை.

ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, தீபு ஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். 4 ம்யூசிக்ஸ் குழுவினர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்களை விட பின்னணி இசையில் அவர்களின் உழைப்பு அட்டகாசமாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
நவரசா சார்பாக ஸ்ரீஜித் மற்றும் ப்ளஸ்டி ஸ்ரீஜித் இப்படத்தை தயாரித்துள்ளனர்.மொத்தத்தில் திரைப்படமாகப் பார்க்கும்பொழுது, ஒரு பழி வாங்கும் கதைக்கு ஏன் பேய்க் கதை தொடர்பான ஜோடனைகள் பூசினார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.

அது போல் ப்ளாஷ்பேக் காட்சிகள் குற்றவாளிகள் என்று நாம் நினைப்பவர்களின் நியாயங்களைப் பேசுவதாலும், நாம் அநியாயமாக இறந்து போனவர்கள் என்று நினைத்தவர்கள் அநியாயமானவர்கள் என்பதும் புலப்படும்போது அதிர்ச்சி ஏற்படுவதோடு, நாம் எந்தப் பக்கம் சார்பாக நிற்பது என்கின்ற மனக் குழப்பமும் ஏற்படுகிறது.

இதனாலயே இறுதிக் காட்சிகளில் நாயகன் வில்லனாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரத்தை வெறி கொண்டு தாக்கும் காட்சிகளில் நாம் தேமே என்று ஸ்க்ரீனைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

மேலும் நாயகனுக்கும் அக்காவிற்குமான பிணைப்போ, அக்காவிற்கும் அக்கா கணவருக்குமான பிணைப்போ, சத்யாவிற்கும் ரஜினிக்குமான பிணைப்பைப் போல் சொல்லப்படவில்லை.

சத்யா மரணம் தொடர்பாக நாயகனின் அக்காவான கெளரியும் மாமாவும் என்ன பேசிக் கொண்டார்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதற்கான விடை இல்லாமல் இருப்பதும் பார்வையாளர்களாகிய நம்மை அக்கதாபாத்திரத்திடம் இருந்து வெகுதூரம் விலக்கிக் கொண்டு சென்றுவிடுகிறது.அதுபோல் கொலைக்கான மர்மத்தை அவிழ்க்கும் முடிச்சிகளும் அசுவாரஸ்யத்துடன் இருப்பதும் ஒரு குறை.

ரஜினி அக்காள் கணவர் நம்பருக்கு டயல் செய்ததாக சொல்வது எதனால்? ஏன் அவள் எடுக்கும் புகைப்படங்களை நவீனுக்கு அனுப்பி தன் பணியை கடினப்படுத்திக் கொள்கிறாள்? இப்படி பல கேள்விகளுக்கு பதிலே இல்லை.

மொத்தத்தில் இந்த “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தில் அந்த ‘ரஜினி’ என்னும் பெயரில் இருக்கும் ஈர்ப்பைத் தவிர சிலாகிக்க பெரிதாக ஒன்றும் இல்லை.