மகாவீர்யர்- விமர்சனம்

மலையாள சினிமா தனித்துவமானது எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்கிற வேட்கை நிரம்பியவர்கள் அதனால்தான் இந்திய சினிமாவில் மலையாள திரையுலகம் தனித்து நிற்கிறது

அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்கிற விமர்சனங்களைப் பெற்றுவரும் திரைத்துறையில் அவ்வப்போது சில மாறுபட்ட கதைகள் வந்து நம்மை ஆச்சர்யப்படுத்தும்அந்தவகையில் மலையாளத்தில்வந்திருக்கும் படம் மகாவீர்யர்.

மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித் ஷைனி இயக்கத்தில் நிவின்பாலி, ஆஷிப் அலி, லால், ஷான்விஸ்ரீவத்சவா, சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மக்களாட்சியைக் காக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றான நீதிமன்றக் கூண்டில், மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்த மன்னர் அமைச்சர் ஆகியோரை ஏற்றி விசாரிக்கிறார்கள்.

கேட்கவே வித்தியாசமாக இருக்கும் இக்காட்சிகள் திரையில் வரும்போது பார்க்கவே பரவசமாக இருக்கின்றன.படம் முழுக்க நீதிமன்ற அறைக்குள்ளேயே நடந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பார்வையாளனை சிரிக்க வைத்து கொண்டிருக்கும்  அதிலும் மனைவிக்கு ஜீவனாம்சமாகக் கொடுக்கும் பணத்தை  நாணயங்களாகக் கொடுப்பதும் அதன்பின் வரும் காட்சிகளும் சிரிப்போ சிரிப்பு.

நிவின்பாலி, சாமியாராக வருகிறார். சாந்தமான முகத்துடன் அவர் செய்யும் சாகசங்கள் அருமை. அவர் மீதான வழக்கில் அவர் வைக்கும் வாதங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன. இரண்டாம்பாதியில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தாலும் கதையின் திருப்புமுனைக் காட்சி அவரால் நடக்கிறது.

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர்

இப்படி ஒரு வேடத்தை ஏற்றுக் கொண்டு நடித்திருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது இந்தப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருருப்பதும் அவரே என்பது தமிழ் சினிமா கதாநாயகர்களிடம் எதிர்பார்க்க முடியாததுமன்னராக நடித்திருக்கும் நடிகர்லால், அமைச்சராக நடித்திருக்கும் ஆஷிப் அலி, நீதிபதியாக நடித்திருக்கும் சித்திக் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

அபலைப்பெண்ணாக வந்து அனைவரையும் கவர்கிறார் ஷான்விஸ்ரீவத்சவா. அரைநிர்வாணத்தில் அவர் நிற்கும்போது அனுதாபத்தைப் பெறுகிறார்.பெண்களின் உள்ளத்தையும் உறுதியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்

மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான எம்.முகுந்தனின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நாட்டில் நடக்கும் பல்வேறு அட்டூழியங்களைத் தோலுரிப்பது தெரியாமலேயே தோலுரிக்கிறது.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் இக்கதையைத் தேர்ந்தெடுத்துப் படமாக்கிய இயக்குநர் அப்ரித் ஷைனி பாராட்டுக்குரியவர்.

TAGS: Abrid Shine Asif Ali Film Review Lal M.Mukundan Mahaveeryar Nivin pauly Shanvi Srivastava Siddique