நடிகர் விக்ரம் கடின உழைப்பாளி.தான் ஏற்றிருக்கும் வேடத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்,அதற்கேற்ற நடிப்பைக் கொஞ்சமும் குறையாமல் கொடுத்து வியக்க வைப்பவர் ஆகிய இலக்கணங்களைக் கொண்டவர்.அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக அவருடைய தோற்றமும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது.அன்பு,கோபம்,
அவருக்கு இணையாக மல்லுக்கு நின்றிருக்கிறார் பார்வதி.கங்கம்மா கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.விக்ரமும் பார்வதியும் இணைந்து திரையில் வரும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்கள்.
ஆர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகாமோகனன், நானும் நடிப்பில் சளைத்தவளில்லை என்று காட்டியிருக்கிறார்.அவருடைய கதாபாத்திரம் தொன்மையை வெளிப்படுத்தப் பயன்பட்டிருக்கிறது.பசுபதி கதாபாத்திரம் படத்துக்கு மட்டுமின்றி வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகிற கதாபாத்திரம்.பல ரகசியக் கதவுகளைத் திறந்து வைக்கும் அப்பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் அவர்.
ஆங்கிலேயராக நடித்திருக்கும் டேனியல் இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்த வெள்ளைக்காரர்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகிறார். நடிப்பிலும் குறைவில்லை.ஹரிகிருஷ்ணன்,முத்து
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம்.ரசித்துக் கேட்க வைத்திருக்கிறார்.பின்னணி இசையில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தி படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார்.
தமிழ்ப்பிரபா,அழகியபெரியவன் ஆகியோரோடு இணைந்து எழுதியிருக்கிறார் பா.இரஞ்சித்.வசனங்களில் ஆழமும் கூர்மையும் நிறைந்திருக்கின்றன.
முதல்பாதியில் எழுதப்பட்ட திரைக்கதை இறுக்கமாக அமைந்து படத்தை வேகமாகக் கொண்டு செல்கிறது.அதனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியில் சில தடுமாற்றங்கள், வரலாற்று திருத்தல் வாதங்கள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.
தன்னுரிமை மற்றும் மண்ணுரிமைக்கான போராட்டம்,அதற்குள் பவுத்தம் பலவீனமாக்கப்பட்டது, தாய் வழிச் சமூகம், மூத்தோர் வாழ்வியல் உள்ளிட்ட ஏராளமான விசயங்களைக் காட்சிகள் வசனங்கள் குறியீடுகள் மூலம் பதிந்து தன் விருப்பம் என்ன என்பதை யதார்த்தத்துக்கு புறம்பாக அழுத்தமாக நிறுவ முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.