ஹீரோ டைட்டில் பஞ்சாயத்து

சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா ஆகிய இருவர் நடிக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என டைட்டில் இடப்பட்டு சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று மாலை சிவகார்த்தியின் ‘ஹீரோ’ படத்தின் 2-ஆவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ஹீரோ. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது

அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர். டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிக்க, ஆனந்த் அண்ணாமலை இயக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே, ஹீரோ தலைப்புக்கான சர்ச்சை துவங்கியது.

 ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தத் தலைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கே உரிமை கொடுத்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கே.ஜே.ஆர் நிறுவனமோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டது. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் சர்ச்சை நீடித்தது.

சமீபத்தில் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம், ஹீரோ படத்தின் தலைப்பு தங்களுக்குச் சொந்தமானது என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

அதில் கடந்த 2018ஆம் ஆண்டிலேயே ஹீரோ படத்தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், ஹீரோ டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என்று ஏப்ரல் மாதத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கூறப்பட்டும், அந்த டைட்டிலை சிவகார்த்திகேயன் படக்குழு பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறு ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் பல வழிகளில் ‘ஹீரோ’ தலைப்புக்கு முயன்று வரும் சமயத்தில், சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் இரண்டாவது லுக் நேற்று(அக்டோபர் 18) மாலை வெளியாகியிருக்கிறது.

இதன் மூலம், கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தத் தலைப்பை பயன்படுத்துவதில்உறுதியாக இருப்பது தெளிவாகியிருக்கிறது. அதே சமயம், ட்ரைபர் ஆர்ட்ஸ் நிறுவனம் இது குறித்து தங்கள் பதிலை விரைவில் அளிக்கும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.