ஆலம்பனாவில் நவயுக அலாவுதீன் யார்?

தமிழ் சினிமாவில் உடல்கேலி வசனங்கள் பேசாத காமெடியனாகவும், அதே நேரம் சிறந்த நடிகராகவும் வலம் வரும் நடிகர்கள் சொற்பமே. சமீபகால சினிமாவில் முனீஸ்காந்த் & காளி வெங்கட் மாதிரியான நடிகர்களைக் குறிப்பிடலாம்.

குறிப்பாக, முண்டாசுப்பட்டி, ராட்சசன், மாநகரம் மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிகர் முனீஸ்காந்த். தொடர்ச்சியாக, பல படங்களில் நடித்துவருகிறார். அப்படி, அவரின் லைன் அப்பில் இருக்கும் ஒரு படம் ‘ஆலம்பனா’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.

வைபவ் நாயகனாக நடித்திருக்கிறார். அலாவுதீனாக வைபவும், ஜீனியாக முனீஸ்காந்தும் இருக்கும் ‘ஆலம்பனா’ பட போஸ்டர் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. ஃபேண்டஸி சினிமாவாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தை, பரி கே.விஜய் இயக்கிவருகிறார். இவர், முண்டாசுப்பட்டி மற்றும் இன்று நேற்று நாளை படங்களில் அசோசியேட்டாக பணியாற்றியிருக்கிறார்.

வைபவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருக்கிறார். அதோடு, திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், முரளி ஷர்மா மற்றும் ஆனந்த்ராஜ் என காமெடி பட்டாளங்களே நடித்திருக்கிறது.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பில் ஒரு காட்சியை எடுக்க 72 மணிநேரம் எடுத்துக் கொண்டதாம் படக்குழு. எந்த வித இடைவெளியும் இன்றி அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். மைசூர், சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறது படக்குழு. ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விரைவிலேயே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

ஜெய்சங்கர் நடித்த ‘பட்டணத்தில் பூதம்’ , கமல்ஹாசனின் ‘அலாவுதீனும் அற்புதவிளக்கம்’ படங்களின் வரிசையில் நவயுக அலாவுதீனாக ‘ஆலம்பனா’ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்தில் வில் ஸ்மித் நடித்த ‘அலாதீன்’ படம் கூட ஹாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.