அசராத அமரன் பின் தங்கும் பிரதர், ப்ளடி பெக்கர் திரைப்படங்கள்

தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ளது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் 31, 1, 2, 3 என நான்கு நாட்கள் தொடர்விடுமுறை  வருகிறது. இதனால் தீபாவளி அன்று வெளியாகும் படங்களுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும், அதற்கேற்ப வசூலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி அன்றுசிவகார்த்திகேயன் – சாய்பல்லவி நடித்துள்ள ‘அமரன்’, ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ மற்றும் கவின் நடித்துள்ள‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ மட்டுமே வெளியாகவுள்ளது. இந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள ‘சிங்கம் அகைன்’ மற்றும் கார்த்திக் ஆர்யன் நடித்துள்ள ‘பூல் புல்லையா 2’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகவுள்ளன.

இதில் ‘அமரன்’ படத்தினை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அந்நிறுவனம்‘வேட்டையன்’படம் வெளியானபோதே முன்னணி திரையரங்குகளை ‘அமரன்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டது. இதனால் தீபாவளி படங்களிள் அதிக திரையரங்குகள் ‘அமரன்’ படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ‘பிரதர்’ படத்தின் தமிழக உரிமையினை ஐங்கரன் கருணாமூர்த்தி வாங்கி  ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். ஆகையால்  ‘பிரதர்’ படத்திற்கு சுமார் 250 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
‘ப்ளடி பெக்கர்’ படத்தினை ‘கருடன்’ மற்றும் ‘மகாராஜா’ படத்தினை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இரண்டு படங்களுடன் ரெட் ஜெயண்ட் நிறுவனம் களத்தில் இருப்பதால் ப்ளடி பெக்கர் படத்திற்கு முதல் தரமானதிரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
 ‘லக்கி பாஸ்கர்’ படத்தினை தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான முருகானந்தம்
 ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். துல்கர் சல்மானுக்கு என்று தமிழகத்தில் குறிப்பிட்ட ரசிகர் வட்டாரம் இருப்பதால் லக்கி பாஸ்கர் படத்திற்கு பார்வையாளர்கள் வர வாய்ப்பு இருக்கிறது.இந்திப் படங்களான ‘சிங்கம் அகைன்’ மற்றும் ‘பூல் புல்லையா 2’ ஆகிய படங்கள் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே முன்னிரிமை அளிக்கப்படும். ஏனென்றால் இதர திரையரங்குகளில் பெரியளவில் மக்கள் வரமாட்டார்கள். அதுமட்டுமன்றி, ‘சிங்கம் அகைன்’ திரைப்படம் தங்களது விநியோக உரிமையினை ஒட்டுமொத்தமாக பிவிஆர் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். அதனால் பிவிஆர் மல்டிப்ளக்ஸில் அந்தப் படத்துக்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள்.
முதல் நாள் மட்டுமே புதிய படங்களை திரையிட திரையரங்குகள் மத்தியில் நெருக்கடி ஏற்படும். அடுத்த நாள் மக்கள் வரவேற்பை பெற்ற, அவர்கள் விரும்பி பார்க்கும் படங்களுக்கு தியேட்டர்களில் காட்சி அதிகரிக்கப்படும். மக்கள் விரும்பாத படங்களின் காட்சி குறைக்கப்படும் அல்லது தூக்கப்படும். இறுதிக்கட்ட நிலவரப்படி தமிழ்நாடுமுழுவதும் திரையரங்க ஒதுக்கீடு, முன்பதிவில் அமரன் ஆதிக்கம் செலுத்தி முதல் இடத்தில் உள்ளது. பிரதர், ப்ளடி பெக்கர் இருபடங்களின் முன்பதிவில் மந்தமான நிலையே நீடிக்கிறது.