வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்த விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில்  ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை சென்னையில் நடத்தினர்.
சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சியில் இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில்இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில்,
” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இதற்கு முன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். இந்த படத்தை நான் முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன்.
இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின. ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னை பாராட்டினார்கள். கை குலுக்கினார்கள். கட்டி அணைத்தார்கள். அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என்னால் மறக்கவே இயலாது. இதற்காக அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் நடித்த சுனில் ,பவானி ஸ்ரீ ,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி, ராதிகா மேடம், மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி.
மமீதா பைஜூ தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்.
ஜி வி பிரகாஷ் குமாருடன் ‘வாத்தி’ படத்திலிருந்து பயணிக்கிறேன். முதல் நாள் அவரை சந்தித்து, ‘உங்களை…சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்க வேண்டும்?’ என கேட்டேன். ‘ப்ரோ’ என்று கூப்பிடுங்கள் என்றார். ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள். நாங்கள் இருவரும் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி விட்டோம். ஒரு பாடலை முழுமையாக நிறைவு செய்த பிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால்… சிறிது கூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார். இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார். அவர் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார். இந்த புரிதலுக்கு நன்றி.
‘தி‌ ஒன்’  சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது.
இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது.
சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.
திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்… படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்…. நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்” என்றார்.