உழைப்பாளர் தினம் – திரைவிமர்சனம்

குடும்பத்திற்காக சொந்த ஊரை விட்டுவிட்டு பல வருடங்களாக சிங்கப்பூரில் பணியாற்றும் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், தனது சொந்த ஊரில் கடை ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க, திருமணமான இரண்டு வாரங்களில் மீண்டும் சிங்கப்பூர் பயணிக்கும் அவர், அங்கு தனது சொந்த கடை கனவுக்காக கடுமையாக உழைக்கிறார். இதற்கிடையே அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

தகவல் தெரிந்தாலும் தன்னால் உடனடியாக ஊருக்கு கிளம்ப முடியாத சூழலில் சிக்கி தவிக்கும் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், என்ன செய்தார்?, அவரது சொந்த கடை தொடங்கும் கனவு நிறைவேறியதா? என்பதே உழைப்பாளர் தினம் படத்தின் ஒருவரிக் கதை.
குடும்பங்கள காக்ககடல் கடந்து அயல்நாட்டிற்கு சென்று உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களின் நிலவரத்தசொல்வதே ‘உழைப்பாளர் தினம்’. திரைப்படம்
‘டூலெட்’, ‘காதலிசம்’, ‘வட்டார வழக்கு’ என தனது ஒவ்வொரு படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கதையின் நாயகனாக நடித்து கவனம் ஈர்த்து வரும் சந்தோஷ் நம்பிராஜன், இந்த படத்தில் நாயகனாக , குடும்பத்திற்காக வெளிநாட்டில் பலவித ஏக்கங்களுடன் உழைத்துக் கொண்டிருப்பவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். சொந்த பந்தங்களை விட்டுவிட்டு கடல் கடந்து சென்று உழைப்பவர்கள், கடுமையான உழைப்பு மூலம் உடல் ரீதியாக மட்டும் இன்றி மனதளவிலும் எத்தகைய வலி மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், என்பதை தனது இயல்பான நடிப்பு மற்றும் உடல் மொழி மூலம் திரையில்பிரதிபலிக்கின்றார் சந்தோஷ் நம்பிராஜன்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி, ஆரம்பத்தில் வசனம் பேசுவதில் சற்று தடுமாறியிருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கதபாத்திரத்துடன் பொருந்தி போகிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அன்புராணி, மற்ற வேடங்களில் நடித்திருக்கும் கார்த்திக் சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குநர் சம்பத்குமார் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
மசூத் ஷம்ஷாவின் இசையில், சிங்கை சுந்தர் மற்றும் கனியன் செல்வராஜ் ஆகியோரது வரிகளில் பாடல்கள் படத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை.
சதீஷ் துரைகண்னுவின் ஒளிப்பதிவும், கோட்டீஸ்வரனின் படத்தொகுப்பும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
குடும்பங்களை விட்டுவிட்டு வெளிநாடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், அவர்கள் மனதில் சுமந்துக் கொண்டிருக்கும் கனவுகளையும் மையமாக கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன், சிறிய பட்ஜெட்டில் இதுவரை சொல்லப்படாத வெளிநாடு வாழ் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
.தங்களின் குடும்பத்திற்காக வெளிநாட்டில் உழைத்தாலும், அந்த குடும்பங்கள் அவர்களின் ஏக்கங்களையும், மனதையும் பார்க்காமல், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமே பார்ப்பதும், அதனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் இறுதியில் தங்களது வாழ்க்கையையும், கனவுகளையும் தொலைத்துவிட்டு புலம்பும் உழைப்பாளர்களின் குரலை இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் ஒலிக்கச் செய்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த  ‘உழைப்பாளர் தினம்’ உழைப்பாளர்களின் மனதை திறந்து காட்டியிருக்கிறது.