நடிகைகங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ படத்துக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1975-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர்இந்திரா காந்தியால் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டங்களில் ஒன்றாக இன்றளவும் விவாதிக்கப்பட்டு வரும் அவசரகால சட்டம் பற்றிய காலத்தை பற்றிய படம்தான் எமர்ஜென்சி .
நடிகைகங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், அனுபம் கேர் மற்றும் ஸ்ரேயாஸ் தல்பாடே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எமர்ஜென்சி திரைப்படம் ஜனவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்துக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையே தற்போது ஏற்பட்டுள்ள விரிசலே இந்த தடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த 2024 ஆகஸ்ட்டில் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போது, அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது.