ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின் சினிமாவில் நடிக்க வந்தவர் காக்கா முட்டைபடத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அழகியல் இல்லாத அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா. படைப்புரீதியாகவும், வணிக அடிப்படையிலும் மிகப் பெரும்வெற்றி பெற்றது காக்கா முட்டை. இருந்தபோதிலும் இவருக்கு பிற நடிகைகள் போன்று முதல் தர, இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது பற்றி சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

அமேசான் ப்ரைம் வீடியோ சார்பில் பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களுக்கான நிகழ்ச்சி ‘மைத்ரி’ என்ற பெயரில் சென்னையில் நடைபெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், மது போன்ற நடிகர்களும் ரேஷ்மா கட்டாலா, சுவாதி ரகுராமன், யாமினி யக்னமூர்த்தி, அபர்ணா புரோஹித் போன்ற திரைக்குப் பின்னால் உள்ள படைப்பாளிகள் 8 பேர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 

“நான் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த பின்பு மொத்த திரையுலகமும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டியது. நிறைய பேர் புகழ்ந்தார்கள். ஆனால், அதன் பிறகு எனக்கு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்காமல் சும்மாவே இருந்தேன்.என்னுடைய ஃபிலிமோகிராபியை எடுத்துக்கொண்டால், தனுஷ், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விஜய் சேதுபதி போன்றவர்களை தவிர என்னை பாராட்டிய மற்ற பெரிய நடிகர்கள் யாரும் அவர்கள் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இங்கு ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுதான் பிரச்னை. நீங்கள் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்றால் உங்களிடம் டிஜிட்டல், ஓடிடி, சாட்டிலைட், மார்கெட் மதிப்பு இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் இவையெல்லாம் முக்கியமான ஒன்று” என்றவர்

மேலும் அவர் பேசுகிறபோது, “அதன் பிறகு தான் நான் கதைநாயகி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பெண் மைய கதாபாத்திர படங்களில் நடிப்பதால் பெரிய ஹீரோக்கள் யாரும் என்னை அவர்கள் படத்தில் நடிக்க அழைப்பு விடுப்பதில்லை என நினைக்கிறேன். அதைப்பற்றி நான் கவலைப்படுவதுமில்லை. என்னுடைய படத்தில் நான் தான் ஹீரோவாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து நடிக்கிறேன். அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்என கூறியுள்ளார்.