கள்வன் – திரைவிமர்சனம்

வாராவாரம் தன்னுடைய படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் தற்போதைய ‘வெள்ளிக்கிழமை நாயகனான’ ஜி.வி.பிரகாஷ்குமார் உடன்,இவானா, ‘இயக்குநர்’ பாரதிராஜா, நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, கு.ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கள்வன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும்  கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமம் இருட்டிபாளையம்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ‘கெம்பன்’ என்ற ஜி.வி.பிரகாஷூம், இவரது நண்பரான தீனாவும். பக்கா திருடர்கள். சொந்த ஊரிலேயே கூச்சப்படாமல் திருடும் இவர்கள் கைக்கு எதுவும் கிடைக்கவில்லையென்றால் சமைத்து வைத்திருப்பதை சாப்பிட்டுவிட்டுப் போகும் அளவுக்கு வெள்ளந்திகள். இவர்களின் இந்த்த் திருட்டுத் தொழிலுக்கு அந்த ஊர்த் தலைவரின் மறைமுக ஆதரவும் கிடைத்திருக்கிறது.

அந்தக் கிராமம் வனப்பகுதிக்குள் இருப்பதால் அவ்வப்போது யானைகள் ஊருக்குள் வந்து செல்லும். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் யானையிடம் மிதிபட்டு இறந்து போவார். அவருக்கு மாநில அரசிடமிருந்து 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும் கிடைக்கும்.

ஒரு நாள் பக்கத்து ஊரில் நாயகி இவானாவின் வீட்டில் திருடப் போய் மாட்டிக் கொள்கிறார்கள் பிரகாஷூம், தீனாவும். ஆனால் இவானாவின் அப்பா “போலீஸ் கேஸ் வேண்டாம்” என்று சொன்னதால் ஜெயிலுக்குப் போகாமல் தப்பிக்கிறார்கள்.

ஆனால், இதைத் தொடர்ந்து வழக்கம்போல சினிமாத்தனமான காதல் இவானா மீது பிரகாஷூக்கு ஏற்படுகிறது. இவானா இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் இவானா எங்கே சென்றாலும் பிரகாஷ் அவரை பாலோ செய்து தொல்லை கொடுத்து வருகிறார்.

அந்த நேரத்தில் முதியோர் காப்பகத்திற்கு மருத்துவ சிகிச்சையளிக்க இவானா செல்ல.. அங்கே திருட்டுத் தொழிலைவிட்டுவிட்டு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு வந்ததாக பிரகாஷ் இவானாவிடம் பொய் கூறுகிறார்.

இந்த நேரத்தில்தான் அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜா மீது பிரகாஷின் பார்வை பாய்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக பாரதிராஜாவை தனது தாத்தாவாக தத்தெடுத்துக் கொண்டு தங்களது சொந்த ஊருக்கு  அழைத்து வருகிறார் பிரகாஷ்.இதன் பிறகு என்ன நடந்தது?.. பிரகாஷின் காதல் கை கூடியதா?.. பாரதிராஜாவை பிரகாஷ் தத்தெடுத்தது ஏன்?.. என்பதுதான் இந்தக்  ‘கள்வன்’ படத்தின் மீதமான கதை.

திருடனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் சென்ற படத்தில் பார்த்த  அதே தோற்றத்தில்தான் இப்போதும் தெரிகிறார். அந்த வட்டார மொழியை  மட்டும் கச்சிதமாகப் பேசி சிறப்பு செய்திருக்கிறார்.வழக்கமான பேக்கு காதலனாகவும், காதல் பைத்தியம் பிடித்த கிறுக்கனாகவும் சில காட்சிகளில் தோன்றும் பிரகாஷ். அடுத்தடுத்த காட்சிகளில் பக்கா கிரிமினல் புத்தியுடன் செயல்படுவதும் திரைக்கதையை நகர்த்தும்விதத்தில் நாயகத் தோற்றத்தில் சிறப்பு செய்திருக்கிறார். பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்கும்போது தன்னுடைய உண்மையான நடிப்பையும் பூர்த்தி செய்திருக்கிறார்.

‘பாலாமணி’யாக நடித்திருக்கும் நாயகி இவானாதனது அறிமுகக் காட்சியில் அவருடைய பயந்த நடிப்பும், ஏமாற்றும் நடிப்பும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. பிரகாஷின் உண்மை சுயரூபம் தெரிந்து தேடி வந்து அடிக்கும் காட்சியில் சபாஷ் போட வைத்து.. கிளைமாக்ஸில் பாரதிராஜாவைத் தேடி ஓடும்போதும் நமக்குள் ஒரு பதட்டத்தை உருவாக்குகிறார்.

இன்னார் என்றே தெரியாத நிலையில் ஊருக்குள் வரும் பாரதிராஜா தான் யார் என்பதைக் கொஞ்சம், கொஞ்சமாக வெளிப்படுத்தும்படியான திரைக்கதையில் தனது இயல்பான நடிப்பைக் கொட்டியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தீனா, தனது வழக்கமான நடிப்பின் மூலம், சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். பல இடங்களில் கவுண்ட்டர் டயலாக்கை அடித்து நண்பன் கேரக்டருக்கு தனது பெயரை அழுத்தமாகப் பதிவும் செய்திருக்கிறார்.

மேலும் பிரகாஷ். தீனாவிடம் வீடியோவில் மாட்டிக் கொண்டு சூழ்நிலை கைதியாக வாழும் ஊர் தலைவர், வனத்துறை அதிகாரிகள், வனக் காவலர்கள், ஊர் மக்கள் என்று படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘களவாணி பசங்க’, ‘ஒரு கோழி முட்ட’, ‘டமுக்கு டமுக்கு’ ஆகிய பாடல்கள் கதையை நகர்த்தவும், ‘அடி கட்டழகு கருவாச்சி’, ‘பேசாமல் பேசும் கண்ணு’ என்ற காதல் பாடல்கள் இளசுகளைக் கவர்ந்தும் படத்திக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. ரேவாவின் பின்னணி இசை படத்தின் பிற்பாதியில் சிறப்பு!

படத்தினை இயக்கியிருக்கும் இயக்குநர் பி.வி.சங்கரே ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். வனப் பகுதிகளை, பசுமை மாறாமல் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் இவானாவை ‘ஜலீர்’ என்று அழகுபடுத்தியிருக்கிறார்.

யானை சம்பந்தப்பட்ட காட்சிகளை கிராபிக்ஸில் பதிவு செய்திருந்தாலும் அது தரமானதாக இல்லை. பட்ஜெட் தாங்காது என்பதால் குறைவான அளவிலேயே செய்துவிட்டார்கள் போலும்..!

படத்தில் இருக்கும் பெரும் பிரச்சினை என்னவென்றால், அடுத்தது என்ன என்று நம்மை பதட்டப்பட வைக்காத திரைக்கதையும், சொத்தையான கிராபிக்ஸ் காட்சிகளும், பயமுறுத்தாத யானை கூட்டமும், எந்த உணர்வையும் தூண்டாத நடிப்பும்தான்..!

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் குடிபோதையில் இருக்கும் தீனாவிடம் பாரதிராஜா எங்கே என்று பிரகாஷ் விசாரிக்கும்போது அந்தக் காட்சி இரவு நேரக் காட்சியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரகாஷ் பாரதிராஜாவைத் தேடி காட்டுக்குள் ஓடும் காட்சியில் பட்டப் பகலாகத் தெரிகிறது. இயக்குநர் இதை எப்படி கவனிக்காமல்விட்டார் என்று தெரியவில்லை..!

இடைவேளை வரையிலும் திரைக்கதையில் ஒன்றுமே இல்லை! படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகுதான் கதையே துவங்குவதைப் போல தெரிவது படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்..!

இந்தக் ‘கள்வன்’ நம்மிடமிருந்து எதையும் கவரவில்லை என்பது சோகமான விஷயம்..!