கூரன் – திரைப்பட விமர்சனம்

உலகம் எல்லாஉயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்பதை அடிப்படையாக கொண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என பொருள்படும்.

கார் ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி) கொல்லப்பட்டுவிட அந்தக் கொலைக்கு நீதி கேட்டு ஒரு நாய் போராடுவதுதான் இந்தப்படம்.அது எப்படி முடியும்? என்கிற கேள்விக்கு விடைதான் திரைக்கதை.

படத்தின் நாயகன் என்று சொல்லப்படும் நாய்க்கு மிகச் சரியாகப் பயிற்சி கொடுத்து காட்சிகளுக்குத் தக்க நடிக்க வைத்திருக்கிறார்கள்.

நாய்க்காக நீதிமன்றம் சென்று வாதாடும் வழக்கறிஞர்வேடத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.சட்டம் நீதி நியாயம் தண்டனை ஆகியனவெல்லாம் அவர் இயக்குநராக அறிமுகமான காலத்திலேயே அவருடைய அடையாளமாக மாறிப்போனவை.அதிலிருந்து சில படிகள் முன்னேறி வாயில்லா ஜீவனுக்காக வாதாடும் வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக சரவண சுப்பையா,இன்னொரு வழக்கறிஞராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல்,நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரோடு முக்கிய வேடங்களை ஏற்றிருக்கும் கவிதாபாரதி,சத்யன்,ஜார்ஜ் மரியான்,இந்திரஜா ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மார்டின் தன்ராஜ், நாயை நடிக்க வைத்துக் காட்சிப்படுத்தும் சவாலான வேலையை திறம்படச் செய்திருக்கிறார்.சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

நிதின்வேமுபதி இயக்கியிருக்கிறார்.இப்படி ஒரு மையக்கதையை எழுதியதற்காகவே அவரைப் பாராட்டலாம்.பார்த்தவுடன் அல்லது கேட்ட உடன் நம்ப முடியாத காட்சிகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி காட்சிப்படுத்த நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.வசனங்கள் மூலம் சமுதாய அவலங்களைச் சாடியிருக்கிறார்.

நீதிமன்றம் மனிதர்களுக்கானவை மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானவை எனும் கருத்தை ஓங்கிச் சொல்லியிருக்கும் படம்.திரைமொழியிலும் குறை சொல்ல முடியாத திரைப்படம் கூரன்.