டைட்டானிக்- திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் பிரதானமாக கையாளப்பட்டு வரும் கதை கரு காதல்கதைதான். டைட்டானிக் படம் அந்த காதல் கதையை வேறு மாதிரி சொல்ல முயற்சித்திருக்கிறது.

ஒன்றுக்கு மூன்று காதல் கதைகளைக் கொண்ட படமாக வந்திருக்கிறது டைட்டானிக்.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் கலையரசன்,காளி வெங்கட்,ராகவ் விஜய் ஆகிய மூன்று நாயகர்களும் பயணிக்கிறார்கள்.

அந்தப்பயணத்தில் மூவரும் தங்கள் காதல்கதைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.மூவர் காதலும் தோல்வி.அது ஏன்? அதற்குப் பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லுகிறது திரைக்கதை.

கலையரசன்,காளி வெங்கட்,ராகவ் விஜய் ஆகிய மூவருமே நல்ல காதலர்களாக நடித்திருக்கிறார்கள்.

மூன்று பேரும் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.
நாயகிகளாக கயல் ஆனந்தி,ஆஷ்னா சவேரி ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள்.இருவ்ரும் இருவேறு வித அழகு.ஆனந்தியின் வெகுளித்தனமான நடிப்பும் அகன்ற கண்களும் ஆஷ்னாவின் புன்னகையும் ஆழமான நடிப்பும் இளைஞர்களை ஈர்க்கும்.

மதுமிதா,சேத்தன்,தேவதர்ஷினி, சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி மோகன், காயத்ரி ஆகிய அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்து பாராட்டுப் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பல்லு படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறார்.

இரண்டு நாயகிகளின் இருப்பை அதிகரித்துக்காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் அனைத்தும் இதமாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் காதல் உணர்வுகளுக்கு உரம் சேர்த்திருக்கிறார்.

ராதாகிருஷ்ணன் தனபால் மற்றும் இக்னேஷியஸ் அஸ்வின் ஆகியோர் படத்தைத் தொகுத்திருக்கிறார்கள்.

மூன்று வெவ்வேறு விதமான கதைகளைச் சுவையாகத் தொகுக்க முனைந்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் எம்.ஜானகிராமன்,பள்ளிக்காதல்,கல்லூரிக்காதல்,பணியிடக்காதல் ஆகிய காதல்களைக் காட்சிப்படுத்தியதோடு காதலுக்குப் பிறகான வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கிறார்.கதையில் கவிழ்ந்து போகும் காதல்கள் மூலம் அவர் சொல்ல விழைந்திருக்கும் கருத்துகள் நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றைப் பாடமாக எடுக்காமல் நகைச்சுவை கலந்து கலகலப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார்.

TAGS: ashna zhaveri Kalaiarasan Kali venkat Kayal Anandhi M.Janakiraman Raghav vijay Titanic