கேப்டன் மில்லர் – திரைப்பட விமர்சனம்

தமிழ் ஈழவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளி கேப்டன் மில்லர். அவர் பெயரில் வந்திருக்கும் படம் அவர் சார்ந்த இயக்கத்தின் சிந்தனையைக் கருப்பொருளாகக் கொண்டு இந்திய மண்சார்ந்த அரசியலை பேசும்படம் கேப்டன் மில்லர். பொங்கல் திருநாள் வெளியீடாக ஜனவரி 12 அன்று முன்னதாக வெளியாகி இருக்கும் படம் எப்படி இருக்கிறது…..
விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் இன்றைக்கும் விடுதலை பெறப் போராடும் சமகால நிகழ்வுகளையும் நினைவூட்டும் கதை கேப்டன் மில்லர்.
தனுஷ் மூன்றுவிதமான தோற்றங்களில் வருகிறார்.ஒவ்வொன்றிலும் தன் தனித்தன்மையை நிறுவுகிறார். அவற்றில் ஆக்ரோச நாயகனாக அதகளம் செய்யும் காட்சிகளில் ஆட்சி செய்திருக்கிறார்.

பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன் ஆகிய மூன்று நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். படத்துக்கு நாயகிகள் தேவை என்பதற்காக இல்லாமல் கதைக்கு, அது சொல்லும் வலிமையான கருத்துக்கு நாயகிகளாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு இந்த அணுகுமுறை புதிது.
கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் பாத்திரப்படைப்பும் அவர் நடிப்பும் இரண்டாம்பாகத்திற்கான முன்னோட்டம்.மற்றும்
இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், அப்துல் லீ, ஜான் கொக்கன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார்.
சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அனல் காட்சிகளிலும் தெறிக்கிறது.

நீ யாரு? உனக்கு என்ன வேணும்ங்குறத பொறுத்து, நான் யாருங்குறது மாறும் என்பது உள்ளிட்ட அழுத்தமும் ஆழமுமான வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
மண்விடுதலை, பெண்விடுதலை மற்றும் சாதீய விடுதலை ஆகியனவற்றை இரத்தம் தெறிக்கத் தெறிக்கப் பேசியிருக்கிறார் இயக்குநர் அருண்மாதேஸ்வரன்.
அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கும் உத்தி தமிழ் சினிமாவிற்கு புதியது மட்டுமல்லரவேற்புக்குரியதும் கூட.