ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி, ‘ஜவான்’ படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில்
இயக்குநர் அட்லீ பேசுகையில்,
” நான்காண்டிற்கு முன்னால் இதே இடத்தில் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்தேன். ஜவான் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது? என்ற விவாதம் நடைபெற்றது. சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியதில் பங்காற்றிய வீர முத்துவேல் நினைவுக்கு வந்தார். அவர் இந்த கல்லூரியில் படித்த மாணவர் என்பதால்.. இதே இடத்தை மீண்டும் பெருமிதத்துடன் தேர்வு செய்தோம். மும்பையிலிருந்து ஆலிஃப் என்ற நண்பர் ஷாருக்கான் உங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். நான் முதலில் நம்பவில்லை. பிறகு உண்மை தான் என்று தெரிந்தவுடன் ஷாருக் கானை சந்திக்க மும்பைக்கு சென்றேன்.
பத்து வருடத்திற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக எந்திரன் படத்தில் பணியாற்றியபோது மற்றொரு உதவி இயக்குநரான ஆடம் தாஸ் படப்பிடிப்பு நடக்கும் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கேட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார். அந்த வீடு ஷாருக்கானுடையது. எனக்கு அது அப்போது தெரியாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கேட் எனக்காக திறந்தது. உள்ளே சென்று ஷாருக் கானை சந்தித்தேன். ஷாருக்கானை சந்தித்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை அவர் என்னை கேட்காமல் எதுவும் பேச மாட்டார்.
ஒருவர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றால், அவருக்கு அருகில் இருக்கிறவர்கள் நேர்மையாகவும் திறமையுடனும் இயங்குவார்கள். அந்த வகையில் ஷாருக்கானுக்கு பூஜா தட்லானி பணியாற்றி வருகிறார். இவர் தான் இந்த படத்தின் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு அச்சாணியாக இருந்தவர். இப்படத்தின் கதை விவாதம் நடைபெறுகிறது. இடையில் கோவிட் வருகிறது.
எட்டு மாதத்திற்குள் இந்த படத்தை நிறைவு செய்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக இது மூன்றாண்டுகளுக்கு மேலானது.
கதை பேச பேச… பிரம்மாண்டமாக உருவானது. பட்ஜெட்டும் உயர்ந்தது. எனக்கு தெரிந்து அந்த தருணத்தில் அந்த பட்ஜெட்டிற்கு ஷாருக்கானும் கௌரி கானும் ஓகே சொன்னார்கள். அது மிகப்பெரிய முடிவு. இதற்காக மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். இதன் காரணமாகத்தான் யாரையும் சந்திக்க முடியவில்லை.
Related Posts
இப்படத்தின் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சு வார்த்தை நடத்த நடந்தபோது, ஷாருக் உங்கள் விருப்பம் என்றார். நான் அப்போது டார்லிங் நயன்தாராவை முன்மொழிந்தேன். அவரும் சம்மதித்தார். அதன் பிறகு நயனிடம் பேசி கதையை சொன்ன பிறகு அவரும் சரி என்றார். ஓணம் திருவிழாவை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு சென்றிருப்பதால் அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.இந்த படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்த போது நான் விஜய் சேதுபதியை சொன்னேன். அவரை நேரில் சந்தித்துப் பேசினேன். அவரும் என்னை சௌகரியமான சூழலில் வைத்துக் கொண்டார். கதையைப் பற்றி நிறைய பேசினோம். இந்த படத்தில் அவரும் ஒரு ஹீரோதான். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறார். அவர் தனக்கான பாதையை அவரே தேர்வு செய்து கொண்டு பயணிக்கிறார். எல்லோரும் அவருடன் பயணிப்போம். இந்த படத்தில் அவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.
அடுத்ததாக படத்தின் இசையமைப்பாளராக யாரை பணியாற்ற வைப்பது என்று விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, என்னுடைய சகோதரரும், நண்பனுமான அனிருத்தை தொடர்பு கொண்டேன். படத்தின் பணிகள் குறித்து விவரித்து, ஒரே ஒரு மெட்டை எனக்காக போட்டு தாருங்கள். அதை ஷாருக்கிற்கு அனுப்பி அவரின் முடிவை அறிந்து கொள்கிறேன் என்றேன். உடனடியாக ‘சிங்க பெண்ணே சித்திரப் பூ..’ எனத் தொடங்கும் மெட்டை உருவாக்கி கொடுத்தார். அந்தப் பாட்டு வேற லெவலில் இருந்தது. அவர் இசையமைக்க தொடங்கினார். இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருக்கிறது. அனிருத்துடன் பணியாற்றுவது என்பது வகுப்புத் தோழருடன் இணைந்து பணியாற்றுவது போல் எளிதானது.யோகி பாபு மீது தமிழ் திரையுலகில் தவறான விசயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. அவர் கால்ஷீட் தரவில்லை. சம்பளம் அதிகமாக கேட்கிறார் என்று.. ஆனால் எனக்குத் தெரிந்து பல உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் வாங்காமல் கால்ஷீட் கொடுத்து அவர்களுக்கு உதவி இருக்கிறார்.
பாடலாசிரியர் விவேக் இந்த படத்தில் பாடலாசிரியராக மட்டும் பணியாற்றாமல் கதை விவாதத்திலும், இப்படத்தின் பின்னணி பணிகளிலும் எனக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.
குட்டியை பிரசவிக்கும் தருணத்தில் மான் ஒன்று அந்த காட்டில் பிரசவம் செய்வதற்கான சரியான இடத்தை தேர்வு செய்து கொண்டு இருந்தது. ஒரு பக்கம் நீரோடை.. மறுபக்கம் முட்புதர். இதுதான் சரியான இடம் என்று தேர்வு செய்து கொண்டிருந்த கணத்திலேயே அந்த மானுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குட்டி பிறந்துவிடும் என்ற மகிழ்ச்சியிலிருந்த அந்த மானுக்கு திடீரென்று மேகம் கருத்து மழை வரும் என்று அறிகுறி தென்பட்டது. அந்தமானின் வலப்பக்கத்தில் ஒரு புலி, வேட்டையாடுவதற்காக மானை பார்த்துக் கொண்டிருந்தது. புலி நம்மை மட்டுமல்ல நம் குட்டியையும் கடித்து தின்று விடுமே என்ற தவிப்பில் அந்த தாய் மான் இடப்பக்கம் பார்த்தபோது அங்கு ஒரு வேடன் வில்லில் அம்பைப் பொருத்தி வேட்டையாடுவதற்காக குறி பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நினைத்து கண்ணை மூடியதாம்.
கண்ணை மூடுவதற்கு முன் ஒரு விசயம் நடந்தது. மேகம் கருத்து இடி இடித்து அந்த மரம் எரிந்தது. ஒரு பக்கம் புலி.. மற்றொரு பக்கம் வேடன்.. திரும்பவும் ஒரு இடி இடித்தது. அந்த அதிர்ச்சியில் வேடன் எய்த அம்பு புலி மீது பாய்ந்தது. மழை பெய்து அந்த காட்டுத்தீ அனைந்து விட்டது. உங்களை சுற்றி ஆயிரம் எதிர்நிலை ஆற்றல்கள் இருந்தாலும்… உங்களுடைய கவனம் உங்கள் பணியின் மீது இருந்தால் போதும். வெற்றி நிச்சயம்.
என் வெற்றியின் ரகசியம் என் மனைவி தான். அவர் கொடுக்கும் ஒத்துழைப்பு எதனோடும் ஒப்பிட இயலாது. ” என்றார்.