“கங்கனா ரனாவத் ஒரிஜினல் சந்திரமுகியாக படத்தில் நடித்திருக்கிறார். சந்திரமுகிஜோதிகாவையும், சந்திரமுகி – 2வில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனாவையும் ஒப்பிட வேண்டாம்” என அப்படத்தின் கதாநாயகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
சென்னையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “சந்திரமுகி 2 படத்தில் நடிப்பது எனக்கு மிகப் பெரிய பெருமை. காரணம் ரஜினி நடித்த ’சந்திரமுகி’ படத்தை நான் திரையரங்கு சென்று கைதட்டி பார்த்திருக்கிறேன். அப்படியான ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி.இப்படத்தில் கங்கனா ரனாவத் இணைந்தது மிகப் பெரிய ப்ளஸ். சந்திரமுகி யாராக இருப்பார்கள் என நிறைய பேர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நானே பி.வாசுவிடம் கேட்டேன். கங்கனா என சொன்னதும் மகிழ்ந்தேன். ஜோதிகாவைப் போலவே கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்களா என பலரும் என்னிடம் கேட்டனர். இருவரையும் ஒப்பிடவே கூடாது. ஏனென்றால் ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைத்துக்கொண்டார். சந்திரமுகி எப்படி இருப்பாரோ அப்படி நடித்துக் காட்டினார். இந்தப் படத்தில்தான் ஒரிஜினல் சந்திரமுகி யார் என்பதை வெளிப்படுத்துகின்றனர். கங்கனாதான் ஒரிஜினல் சந்திரமுகியாக வருகிறார். இருவரையும் ஒப்பிடவேண்டாம்” என்றார்.