ஜோரா கையை தட்டுங்க – திரைப்பட விமர்சனம்

யோகி பாபு கதை நாயகனா, அல்லது கதாநாயகனா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தும் திரைப்படம்” ஜோரா கைய தட்டுங்க”
தனது அப்பாவிடம் இருந்து முழுமையாக கற்றுக் கொள்ளாத மோஜிக்கலையை வைத்து
ஊர் ஊராக சென்று மேஜிக் ஷோ நடத்துகிறார் யோகிபாபு
 அப்படி ஒரு மேஜிக் ஷோ நடத்தும் பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீஸிடமிருந்து தர்ம அடி வாங்குகிறார்.

வீட்டிற்கு அருகே இருக்கும் அருவி பாலா உள்ளிட்ட இளைஞர்கள் எப்பொழுதும் யோகி பாபுவை வம்புக்கு இழுத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் இவருடைய மேஜிக் ஷோவை ரசிக்கும் சாந்தி ராவ், யோகி பாபுவிடம் அன்பாக நடந்து கொள்கிறார். பின்பு அது காதலாக மாறுகிறது.

அதற்குள் யோகி பாபுவுக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வருகிறது. அந்தப் பிரச்சினைகளில் இருந்து யோகி பாபு எப்படி மீண்டார்? அவருடைய மேஜிக் அவருக்கு கை கொடுத்ததா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

யோகி பாபுவை கதையின் நாயகனாக நடிக்க வைத்து, வித்தியாசமான கேரக்டர் கொடுத்து, ரசிகர்களை ஜோராக கை தட்ட வைப்பார் என நம்பி படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் மலையாள இயக்குனரான வினீஷ் மில்லினியம்.

 படத்தில் பெரிதாக கதை இல்லாவிட்டாலும் திரைக்கதையாவது ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியும் துண்டு துண்டாக நிற்கிறது. மொத்தத்தில் இது நகைச்சுவை படமாகவும் இல்லை,மேஜிக் படமாகவும் இல்லை, ஹாரர் படமாகவும் இல்லாமல் தொங்கி நிற்கிறது.

கதாநாயகி சாந்தி ராவ் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. படத்தில் யாருடைய கேரக்டரும் மனதில் நிற்கவில்லை.

இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான மது அம்பட் ஒளிப்பதிவு உருப்படியாக உள்ளது. அருணகிரி இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஜித்தின் ரோஷனின் பின்னணி இசையும் சுமார் ரகம்.

படத்திற்கு பெரிய பலம் என்றால் யோகி பாபு மற்றும் அவருடைய நடிப்பு  அதோடு கேரள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இடங்கள் ரசிக்கும் படியாக உள்ளன.

மேஜிக் நிபுணராக யோகி பாபுவை திரையில் முழுவதுமாக காட்டி மாயாஜாலம் செய்திருக்கலாம். அப்படி எதையுமே இயக்குனர் திரைக்கதையில் செய்யாமல் ஹாரர் திரில்லர் மோகத்தில் சிக்கி படத்தை சிதைத்து இருக்கிறார்.