ட்ராமா – திரைப்பட விமர்சனம்

ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளை தனித்தனியே சொல்லி இறுதியில் அவை ஒரு புள்ளியில் இணையும் திரைக்கதைகள் ஓடிடி வருகைக்கு பின் வலைதளங்களுக்காக தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திரைப்படமாக தயாராகி வெளியாகியிருக்கிறது
‘ ட்ராமா’ திரைப்படம்
குழந்தைக்காக ஏங்கும் தம்பதி, எதிர்பாராமல் திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் இளம்பெண் என இரு கதைகளை திகைப்பூட்டும் காட்சிகளுடன் விவரிக்கிறது’ ட்ராமா’

விவேக் பிரசன்னா – சாந்தினி தம்பதிக்கு பல வருடங்களாகக் குழந்தை இல்லை.அதற்காக மருத்துவம் பார்க்கிறார்கள்.
சாந்தினி கருத்தரிக்கிறார். அதனை சந்தோஷமாக கொண்டாடும் நேரத்தில்அவருக்கு ஓர் அதிர்ச்சி.
அது என்ன?
ஆட்டோஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி, தனது காதலனால் கர்ப்பமாகி பேரரதிர்ச்சிக்கு ஆளாகிறார்.அது என்ன?

மருத்துவர் போர்வையில் விபரீத வேலையில் ஈடுபடுகிறார் ஒருவர்.அது எதனால்?

இந்த மூன்று முடிச்சுகளையும் படத்தின் இறுதிக் காட்சியில் அவிழ்க்கிறது’ட்ராமா’

எந்தவொரு நடிகரும் நடிக்கத் தயங்கும் வேடத்தை ஏற்று தன் அழுத்தமானநடிப்பின் மூலம் கதாபாத்திரத்தின் குறையையே நிறையாக்கியிருக்கிறார் விவேக் பிரசன்னா.

துக்கம்,மகிழ்ச்சி உடனே அதிர்ச்சி என மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய வேடம் சாந்தினிக்கு அதனை நிறைவாக செய்திருக்கிறார்.

இளம்நாயகி பூர்ணிமா ரவிக்கு காதல் காட்சிகளிலும் அதன்பின்னான அதிரடிக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நல்ல காதலனாகவும் எதிர்மறை நாயகனாகவும் இருவேறுபட்ட வேடங்களையும் செய்திருக்கும் பிரதோஷ்,அதற்கேற்ற நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார்.

மருத்துவர் என்கிற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடும்

பிரதீப் கே விஜயன், காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சீவ், அம்மா கதாபாத்திரத்தில் வரும் ரமா,மாரிமுத்து, நிழல்கள் ரவி,ஆனந்த் நாக் ஆகிய அனைவரும் அளவாக நடித்துள்ளனர்.

அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் படம் மெருகூட்டப்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.ராஜ்பிரதாப்பின இசையில் பாடல்கள் கேட்கலாம்.திகில் காட்சிகளில் பயத்தையும் காதல் காட்சிகளில் ரசனையையும் கொடுத்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் முகன்வேல்,பல கிளைகளை ஒன்றாக இணைப்பதை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

குழந்தையின்மைச் சிக்கலை வைத்து நடக்கும் நிகழ்வுகள் மற்றும் மருத்துவத்துறை குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் மையக்கதை இருந்தாலும் அனைவரும் ஆர்வமுடன் பார்க்கும்படியான திரைக்கதை அமைத்து அதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.

பார்த்து ரசிக்கவும் உணர்ந்து, விழிப்படையக்கூடிய படம்’ ட்ராமா’