தங்கலான் 100 கோடி மொத்த வசூலை எட்டியவெற்றி படமா?

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில்விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கலான்’ திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது சீயான் விக்ரமின் திரையுலக பயணத்தில் அவருடைய திரைப்படங்களுக்கு கிடைத்த சிறந்த முதல் நாள் வசூல் என கூறப்பட்டது. இருந்த போதிலும் அடுத்து வந்த நாட்களில் தங்கலான் படத்தின் வசூல் சரிவடையை தொடங்கியது.
தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு  உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கூறி வந்தார். படத்தில் நடித்திருந்த அனைத்து திரை கலைஞர்களும் தங்களின் அதிகபட்ச உழைப்பை கொட்டியிருந்தனர். படம் வெளியீட்டுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில் மாணவர், இளைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் பங்கேற்று படத்தை விளம்பரம் செய்தும் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வெகுஜன மக்களின் ஆதரவு திரையரங்கை நோக்கி திரண்டு வரவில்லை. அதற்கு காரணம் தங்கலான் படத்தை அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு படைப்பாக முன்நிறுத்தாமல் குறிப்பிட்ட சமூகத்தின் வரலாறாக, இது போன்ற திரைப்படங்களை இயக்குவதற்காகவே திரைபடத்துறைக்கு தான் வந்ததாகவும் அதற்கான வெளிச்சத்தை அம்பேத்கார் மூலம் தான் பெற்றதாக பா.ரஞ்சித் பேசினார். அதனை நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகை பார்வதி ஆகியோர் ஆதரித்து வழிமொழிந்து பேசியது சினிமாவை பொழுதுபோக்கு ஊடகமாக பார்க்கும் பெரும்பான்மை சினிமா பார்வையாளர்களை பதட்டமடைய வைத்ததுடன், தியேட்டருக்கு வராமல் போகவும் காரணமானது. தமிழ் சினிமாவில் ஆக சிறந்த படைப்பாளியாக கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னம் அவர் இயக்கத்தில் வெளியாக உள்ள படங்களை பற்றி கேட்டால் நான் பேசுவதை காட்டிலும் எனது படம் பேசும் என்பார். சமீபகால சினிமாவில் வெற்றி இயக்குநராக பார்க்கப்படும் மாரி செல்வராஜ் தான் பேச வேண்டியதை தன் திரைப்படங்களில் அழுத்தமாகவே பதிவு செய்து வருகிறார். ஆனால் பட வெளியீட்டுக்கு முன்பும் சரி பின்னரும் பா.ரஞ்சித் போன்று பேசியது இல்லை. அதனாலேயே அவரது இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், தற்போது வாழை ஆகிய திரைப்படங்ககளை வெகுஜன மக்கள் திரையரங்குக்கு திரண்டு வந்து பார்த்து வெற்றி பெறவைக்கின்றனர் என்கின்றனர் திரையரங்க வட்டாரத்தில். இனியாவது சுய சமூக புராணம் பேசுவதை தவிர்த்து அனைத்து மக்களுக்குமான சினிமாவை இயக்குவது அவருக்கு மட்டுமல்ல, அவரை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தரும் என்கின்றனர் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும். தங்கலான் விக்டரி வெற்றி என தயாரிப்பு தரப்பில் கூறப்படுவது உண்மையா என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணி அவர்களிடம் கேட்டபோது” அந்தப் படத்தின் முதலீட்டுடன் மொத்த வசூலை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது” பிரம்மாண்டமான வெற்றி என கூற முடியாது என்றார். 160 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தங்கலான் திரைப்படம் முதல்வாரத்திலேயே 100 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்திருக்க வேண்டும். படம் வெளியான இரண்டாவது நாள் வசூல் குறைந்தது. அதில் இருந்து வார இறுதி நாட்களில் கூட மீண்டு வரவில்லை. என்பதுடன் இரண்டாவது வாரம் 50% திரையரங்குகளில் படம் தூக்கப்பட்டு டிமான்டி காலனி, வாழை, கொட்டுக்காளி, போகுமிடம் வெகு தூரமில்லை ஆகிய படங்கள் திரையிடப்பட்டது. முதல் நாள் 26 கோடி ரூபாய் வசூல் என கம்பீரமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த நாட்களில் மட்டுமல்ல வார கடைசியில் கூட மொத்த வசூலை அறிவிக்கவில்லை. தற்போது 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் உலக அளவில்100 கோடி ரூபாய் மொத்த வசூல் என அறிவித்துள்ளது.