ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து அடுத்து விஜய், அஜித்குமார் படங்கள் தான் மூன்றாவதாக 100 கோடி வசூலை ஈட்டியிருக்கும் என்கிற எதிர்பார்ப்பை பொய்யாக்கியவர் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் 2011ம் ஆண்டில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ படம் 100 கோடி வசூல் சாதனையைப் புரிந்து தமிழின் மூன்றாவது 100 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றது.
2012ல் வெளிவந்த ‘துப்பாக்கி’ படம்தான் விஜய் நடிப்பில் வந்த படங்களில் முதலாவதாக 100 கோடி வசூலித்த படம். அஜித் குமார் நடிப்பில் வெளியாகிம 100 கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் படம் 2013ல் வெளியான ‘ஆரம்பம்’.
தமிழில் இதுவரையில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இன்றைய முன்னணி நடிகர்களில் ஜுனியர் நடிகரான சிவகார்த்திகேயன் கூட ‘டாக்டர், டான்’ என இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்துவிட்டார். ஆனால், விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம்தான் அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ‘மகாராஜா’ படம் 100 கோடி வசூலித்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.