சென்னையில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார் ‘நலன்’ என்ற அஸ்வின். இவரது காதலி நாயகியான பவித்ரா மாரிமுத்து. இவர்களின் காதலுக்கு எதிரியாக இருப்பது லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டரும், பவித்ராவின் அண்ணனுமான கெளரவ். தனது தங்கைக்கு தங்களது அந்தஸ்துக்கு தகுந்தாற்போன்று பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார் கெளரவ்.
இந்த நேரத்தில் அஸ்வினின் உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் ஒரு மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார். இதன் பின்னர் அந்த ரெஸ்ட்டாரெண்ட்டில் தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக நாயகன் அஸ்வினை சம்பந்தப்படுத்தி சில தொடர் கொலைகளும் நடக்கின்றன. இந்தக் கொலைகளுக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்று குழம்பும் நாயகன் தானே இதை விசாரிக்கக் கிளம்புகிறார்.
விசாரித்தாரா..? என்ன காரணம் என்று தெரிந்ததா..? கொலையாளி பிடிபட்டாரா..? அந்த அமானுஷ்யங்களுக்கு பின்னணி என்ன..? என்பதுதான் இந்த ‘பீட்சா – 3 தி மம்மி’ என்ற இந்தப் படத்தின் சஸ்பென்ஸான திரைக்கதை.
அஸ்வின் தனக்கு கிடைத்த நாயகன் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். படம் நெடுகிலும் சோகத்துடனேயே அலைந்தாலும், பிரச்சினைகள் அவரை அலைக்கழிப்பதை தன் முகத்திலேயே காட்டியிருக்கிறார்.
ஒரு பக்கம் பேய், மறுபக்கம் கொலைப் பழி என்று தன்னைத் துரத்தும் பிரச்சினைகளிலிருந்து ஓடிவிடாமல் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கி, இந்தப் படத்தின் கதையை தானே கடைசிவரையிலும் சுமந்திருக்கிறார் அஸ்வின்.
சாதாரணமான ஒரு லேப்டாப்பையும், செல்போனையும் வைத்துக் கொண்டு காற்றில் இருக்கும் ஒலி அலைவரிசைகளின் மூலமாக பேயுடன் பேசுவதாகக் காட்டிக் கொள்ளும் நாயகி பவித்ரா மாரிமுத்து, படத்தில் அழகாக உள்ளார். இவருக்கு இருக்கும் ஒரே பிரச்சினையாக தனது காதலனை பேயிடமிருந்து காப்பாற்றும் வேலைக்காக போதுமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
அனுபமா குமார் பாசமான தாயாக தனது சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மகளைத் தேடியலையும் பதட்டத்தையும், மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியாகி அவளைக் காப்பாற்றத் துடிக்கும் யதார்த்தமான நடிப்பையும் காண்பித்து பேய்களின் பழி வாங்கலுக்கு ஒரு நியாயத்தையும் கொண்டு சேர்த்திருக்கிறார்.
இதேபோல் இவரது மகளாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ராவின் தேர்ந்த நடிப்பும் பாராட்டுக்குரியது. 10 நிமிடங்களில் மறந்து போகும் அந்த உணர்வை அவர் மிகச் சரியாகக் கொடுத்திருக்கிறார்.
ஹோட்டல் ஊழியராக பொறுப்பானவராக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் நடிப்பு நமக்கு ஒரு ஆறுதல். வில்லன்களில் வீரா பயந்ததுபோல் நடிக்கும் காட்சிகளில் கவர்கிறார். இன்னொரு பக்கம் தனது உடல் மொழியாலும், கண்களாலுமே வில்லத்தனத்தால் மிரட்டியிருக்கிறார் கவிதா பாரதி. இயக்குநர் போஸ்ட்டில் இருந்து நடிகராக பிரமோஷன் வாங்கியிருக்கும் கெளரவ் தனக்கான கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய பலமே ஒளிப்பதிவுதான். படம் மொத்தமுமே இருள் நிறைந்த காட்சிகளாகத்தான் இருக்கிறது. அனைத்திற்கும் அளவான, தேவையான அளவுக்கு லைட்டிங் செய்து பேய்களின் மிரட்டலுக்கு கொஞ்சமேனும் வழி வகை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்.
இசையமைப்பாளர் அருண் ராஜின் பின்னணி இசைதான் பேய்களின் வருகையையும், சில இடங்களில் ‘திடுக்’ உணர்வையும் கொடுத்திருக்கிறது. பார்வதியின் காரில் பேப்பர் பறந்து வந்து ஒட்டிக் கொள்ளும் காட்சி.. முதன்முறையாக பிரிட்ஜூக்குள்ளே இருந்து ஸ்வீட்டை எடுக்கும் காட்சி.. அம்மா பேயும் இவர்களின் கண்களுக்குத் தெரியும் காட்சி.. என்று சில காட்சிகளில் மட்டும் பயத்தை உண்டு செய்திருக்கிறது பின்னணி இசை.
படத் தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வினின் கத்திரி இன்னும் கொஞ்ச காட்சிகளை ‘கட்’ செய்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். கிச்சனுக்குள் நடக்கும் காட்சிகள் நீண்ட நேரம் நீடித்தும், மீண்டும் மீண்டும் வந்தும் சில நேரம் போரடிக்க வைத்துவிட்டது.
பேய்ப் படம் என்றாலே பேய்கள் திடுக்கென முன்னால் வந்து நிற்பது.. தலைகீழாக தொங்கிய நிலையில் நம்மைப் பார்ப்பது.. வெள்ளை உடையில் தலைவிரி கோலமாக வருவது, ரத்தம் தேய்ந்த முகத்துடன் இருப்பது.. இருட்டு ஓரத்தில் அசையாமல் நிற்பது.. கதவு தானாக மூடிக் கொள்வது.. அவ்வப்போது அணைந்து எரியும் விளக்குகள், பேய்கள் பெரும் மூச்சாக விடுவது.. என்பதெல்லாம் இருக்கும். இந்தப் படத்திலும் இது அப்படியே அட்சரப் பிசகாமல் வந்திருக்கிறது.
இந்தக் காட்சிகளை மட்டுமே திரும்பத் திரும்பக் காண்பித்தே முதல் பாதியை நிரப்பியிருக்கிறார் இயக்குநர். இதற்கு நடுவில் சிவுப்பு கலர் இனிப்பு விதம்விதமான அளவில் இருப்பதும்.. அதை பேய் சமைத்து யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு போவதுமாக திரைக்கதையை அமைத்திருப்பது நமக்கு சலிப்பையே தருகிறது.
இதனாலேயே கொலைகள்.. பேய்களின் அட்டகாச சமையல் என்று இருவித கதைகளைப் பார்த்த பீலிங் முதல் பாதியிலேயே நமக்கு வந்துவிட்டது. இரண்டாம் பாதியின் துவக்கத்திலேயே ஹீரோயினின் காரில் பறந்து வந்து விழுந்த பேப்பரில் பார்த்த செய்திதான் கதைக் களம்போல என்பது தெரிந்துவிட்டது.
சென்னையில், அயனாவரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வாய், பேச முடியாத ஒரு சிறுமியை அந்த அபார்ட்மெண்ட்டின் செக்யூரிட்டி மற்றும் அங்கே வேலை செய்பவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமே இந்தப் படத்தின் முக்கியக் களமாக அமைந்திருக்கிறது.
இந்த இரண்டு கொலைகளின் விஷயமும் போலீஸ் விசாரணையில் என்னவானது..? ஏன்..? எப்படி மறைக்கப்பட்டன..? என்பதற்கு படத்தில் எந்த விளக்கமும் இல்லை. பேய்களின் பழி வாங்கலை மட்டும் காட்டினால் போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும்!
நாயகனுக்கும், அந்தப் பேய்களுக்கும் இடையேயான கனெக்டிவிட்டி பிரில்லியண்ட் ஸ்கிரீன்பிளே. ஆனால் ரெஸ்ட்டாரெண்ட்டில் வேலை செய்தவர்களை பேய்கள் ஏன் அடித்து, உதைத்து, மருத்துவமனையில் படுக்க வைக்க வேண்டும். உண்மையில் நாயகனால்தானே பேய்களின் வேலையும் நிறைவடைகிறது..!?
இதெல்லாம் ஒரு புறம் இருக்க.. படத்தின் துவக்கத்தில் கால்பந்தினால் ஒருவர் நடு இரவில் அவரது வீட்டிலேயே கொல்லப்படுகிறார். அவர் வீட்டிலும் அந்த மம்மி பொம்மை இருந்தது. அந்த பொம்மை இருக்குமிடத்தில் எல்லாம் ஏதாவது அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறும் என்று அவர்களே சொல்கிறார்கள். பின்பு அந்த பொம்மை எப்படி நாயகனின் உணவகத்துக்கு வந்தது என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.
கடைசியாக இப்போது அந்தப் பொம்மையை நூலகர் வாங்கிச் சென்றுள்ளார். அவர் என்னவாகப் போகிறார் என்பதை 4-ம் பாகத்தில் சொல்லப் போகிறார்கள் போலிருக்கிறது..!