பைரி – திரைப்பட விமர்சனம்

பைரி என்பது ஒருவகை கழுகின் பெயர். இந்த பைரி வானில் பறக்கும் புறாக்களை வேட்டையாடுபவை.இதை இந்தப்படத்துக்குப் பெயராக வைக்கக் காரணம், படத்தின் கதைக்கரு புறாப்பந்தயத்தை மையப்படுத்தியது என்பதால்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் புறாப்பந்தயங்கள் நடந்தாலும் நாகர்கோயிலில் நடக்கும் பந்தயங்கள் சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லப்படுகிறது. அதையே மையமாகக் கொண்டு அந்த வட்டாரவழக்கு மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்  படம் பைரி.

நாயகன் சையத்மஜீத் புறா வளர்க்கிறார். அங்கு நடக்கும் புறாப்பந்தயங்களில் முறைகேடுகள் நடக்கின்றன.அதைத் தட்டிக்கேட்கிறார். அதனால் உயிராபத்து வரையில் பல சிக்கல்கள்.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் பைரி படம்.

நாயகன் சையத்மஜீத்தின் வேடம் அடாவடியானது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.எதார்த்தத்துக்கும் இலக்குக்கும் இடையில் சிக்கித் தவிப்பதை நன்றாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ஜான்கிளாடி.எல்லோர் வாழ்விலும் இப்படி ஒரு நண்பர் கதாபாத்திரம் இருக்கும் என்பதைப் பிரதிபலித்திருக்கிறார். அவரே இயக்குநர் என்பதால் கொஞ்சம் கூடுதலாகவே நடித்திருக்கிறார்.

பொதுப்பார்வையில் உருப்படாதவன் என்று சொல்லப்படும் நாயகனுக்கு இரண்டு காதலிகள்.அவர் மேக்னா எலனைக் காதலிக்கிறார். இன்னொருநாயகி சரண்யாரவிச்சந்திரன் அவரை விரும்புகிறார்.இருவரில் நடிப்பில் முந்தியிருக்கிறார் சரண்யாரவிச்சந்திரன்.
நாயகனின் அம்மாவாக வரும் விஜிசேகர், வில்லனாக நடித்திருக்கும் வினுலாரன்ஸ், முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரமேஷ் ஆறுமுகம் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

கதைக்களமான நாகர்கோயிலின் அழகை ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவுகர்வி வளைத்து வளைத்துப் படம் பிடித்திருக்கிறது.அதோடு அம்மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார்.

அருண்ராஜின் இசையில் இரசிக்கும்படி அமைந்திருக்கிறது. பின்னணி இசையால் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

கதையாகப் பார்த்தால் வழக்கமான கதைதான் எனினும் திரைக்கதை, வசனங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களில் மண்மணமும் வட்டார மொழியும் இரண்டறக் கலந்திருப்பது படத்தின் தன்மையை உயர்த்திக்காட்டுகிறது.

எளிய மக்களின் வாழ்விலும் வலியக் கலந்திருக்கும் வன்மத்தைக் காட்சிப்படுத்திக் கலங்க வைக்கிறார் இயக்குநர் ஜான்கிளாடி.

அடுத்தபாகமும் வரும் என்று சொல்வதற்காக இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி கனம்.