மாரி செல்வராஜ் கதையை நிராகரித்த ரஜினிகாந்த்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவந்தது.அது முற்றுமுழுதாகத் தோல்வி அடைந்துவிட்டதாம்.
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
வாழை படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் பைசன் காளமாடன் என்கிற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ்.

அப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பதற்காக ஒரு கதையை எழுதினாராம் மாரி செல்வராஜ்.அந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது.

அந்தக் கதையை ரஜினிகாந்த்திடம் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். அந்தப்படத்தின் கதை குறுகிய வட்டத்துக்குள் இருப்பதாக ரஜினிகாந்த்கருதியதாகச் சொல்லப்படுகிறது.
அதன்பின், துணை முதலமைச்சர் உதயநிதியே ரஜினிகாந்த்திடம்
இது தொடர்பாகப் பேசியிருக்கிறார்.அப்போது மாரிசெல்வராஜ் சொன்ன கதை குறித்து தன் அதிருப்தியை ரஜினிகாந்த் அவரிடம் கூறினாராம்.ரஜினிகாந்த் விருப்பமின்மையை உணர்ந்த பின்பு, வேறு கதை சொல்லச் சொல்லவா? எனக் கேட்டிருக்கிறார் உதயநிதி.

ஆனால், ரஜினிகாந்த் மாரி செல்வராஜே வேண்டாம் எனச் சொல்லியதோடு நான் வேறு இயக்குநரை உங்களிடம் அனுப்புகிறேன்,அவர் சொல்கிற

கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் நாம் அந்தப் படத்தைச் செய்வோம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

இதனால் மாரி செல்வராஜ் சொன்ன கதையை மட்டுமின்றி மாரி செல்வராஜையே நிராகரிக்கும் முடிவை ரஜினிகாந்த் எடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதற்குக் காரணம், மாரி செல்வராஜின் கருத்தியலா? அல்லது ரஜினிகாந்த் படங்களின் வியாபார எல்லை அளவுக்கு அவரால் படம் எடுக்க முடியாது என்பதா? என்கிற விவாதம் தமிழ் திரையுலகில் நடந்து கொண்டிருக்கிறது

இதனால் ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதி ஆனால் இயக்குநர் யாரென்பது இன்னும் உறுதியாகவில்லை என்று சொல்கிறார்கள்.