மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி – திரைவிமர்சனம்

மகேஷ்பாபு இயக்கத்தில், அனுஷ்கா, நவீன் பொலிஷெட்டி மற்றும் பலர் நடிக்க தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள  படம்.படத்தின் கதை 18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கானது அல்ல. ஒரு 18 பிளஸ் கதையை சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் கொடுத்து கடைசியில் உணர்வுபூர்வமாக முடித்திருக்கிறார் இயக்குனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட பெற்றோர் பின்னர் பிரிந்து போனதால் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் வளர்ந்தவர் அனுஷ்கா. அதனால், அம்மாவின் மறைவுக்கு பின் தனக்கு ஒரு துணை வேண்டும் என ஆசைப்படுகிறார். அது குழந்தையாக இருக்க வேண்டும் 

திருமணம் செய்து கொள்ளாமல் ‘ஸ்பெர்ம் டோனர்’ மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, நல்ல குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறார். ஐ.டி கம்பெனியில் வேலை செய்து கொண்டு, ஸ்டான்ட்அப் காமெடியனாகவும் இருக்கும் நவீன் பொலிஷெட்டியைப் பலத்த சோதனைகளுக்குப் பிறகு தேர்வு செய்கிறார்.ஆனால், அனுஷ்காவை மனதாரக் காதலிப்பதாகச் சொல்கிறார் நவீன். ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் முடிவுக்குக் கட்டுப்பட்டு ‘ஸ்பெர்ம்’ டொனேஷன் செய்கிறார். அதனால் கருவுறும் அனுஷ்கா மீண்டும் லண்டனுக்குத் திரும்புகிறார். எப்படியாவது அனுஷ்காவைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.கரணம் தப்பினால் மரணம் என்பதை போல
கொஞ்சம் தடுமாறியிருந்தாலும் ஆபாசமாக மாறிவிடக் கூடிய கதை. ஆனால், அப்படி எதையும் நடத்திவிடாமல் காமெடியுடன், காதலுடன் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.நகைச்சுவையும், காதலும் நவீன் பொலிஷெட்டிக்கு நன்றாகவே வருகிறது. இந்தக் கால இளைஞனை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார். அனுஷ்கா மீது அதிக காதலுடனும், தன்னுடைய ஸ்டான்ட்அப் காமெடியில் சாதிக்க வேண்டும் என்ற வேகத்துடனும் இருப்பவர். உண்மைக் காதலுக்கு என்றுமே பலன் உண்டு என்பதை நிரூபிக்கும் ஒரு கதாபாத்திரம்.
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள ஒரு படம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. அனுஷ்காவின் தோற்றத்தை சிறப்பு எபெக்ட்ஸ் கொண்டு ஏதோ மாற்றியிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. பல காட்சிகளில் அவருடைய முகத்தில் நிறைய வித்தியாசம் தெரிகிறது. இருந்தாலும் நடிப்பில் தன் அனுபவத்தை அழுத்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறார் அனுஷ்கா.நவீன் அப்பாவாக முரளி சர்மா, அம்மாவாக துளசி இருவருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள். யதார்த்தமாய் நடித்து கவர்ந்திருக்கிறார்கள். நாசர் கொஞ்சமாக வந்து போகிறார். நவீன் நண்பனாக அபிநவ் கோமதம், அனுஷ்கா தோழியாக சோனியா தீப்தி நட்புக்குக் கை கொடுக்கிறார்கள்.
பாடல்களுக்கு ரதன், பின்னணி இசைக்கு கோபி சுந்தர். பாடல்கள் சிறப்பாக இருந்திருக்கலாம். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் அழகைக் கூட்டுகிறது.
அனுஷ்காவும், நவீனும் மோதிக் கொள்வதும், பின்னர் சேர்ந்து கொள்வதுமாக மாறி மாறி நகர்வது சலிப்பைத் தருகிறது. ஒரே மாதிரியான காட்சிகள் திரும்பத் திரும்ப வருகிறது. அவர்கள் பிரிந்த பின்தான் படத்தில் ஒரு ‘க்ரிப்’ கிடைக்கிறது.