கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம்செப்டம்பர் 27 ஆம்தேதி வெளியாகிறது. இதில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 2.44 நிமிடங்கள் கொண்ட ட்ரெய்லரில் வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊர் மற்றும் உறவுகளை விட்டு இடம்பெயர்ந்தவர் பயணத்தின் வழியாக கதை சொல்கிறார் இயக்குநர் பிரேம்குமார். நகரத்தை நோக்கி வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்ந்தமனிதன் மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறி போனாலும் தன்பூர்வீகத்தையும், கலாச்சாரத்தையும் பண்டிகை காலங்களில் நினைவு கூறவும், கொண்டாடவும் தவறுவதில்லை. அதனால்தான் தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேஷ்டி இன்றளவும் திருமண விழாக்களிலும், கிராமத்து திருவிழா கொண்டாட்டங்களிலும் தவிர்க்க முடியாமல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதனை அப்பட்டமாக பிரதிபலிக்கும் திரைப்படமாக’ மெய்யழகன்’ மெய்நிகர் அழகனாக இருக்கும் என்பதை படத்தின் ட்ரைலர் உணர்த்துகிறது.
அருள் எனும் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரை ‘அத்தான்’ என அன்போடு அழைக்கிறார் கார்த்தி. குளக்கரையில் இருவரது பாதங்களை கடிக்கும் மீன் குஞ்சுகள், வெட்டவெளியில் இருவரும் இணைந்து பாடும் பாடல் என ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சில ஷாட்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. கிராம வாழ்க்கையை வாழ்ந்தவர்களின்”மண் மணக்கும் சொந்த ஊர் வாசம் மற்றும் உறவுகளின் நேசமும் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது” என்பதுடன்”ஊர் மற்றும் உறவுகளுடன் பல்வேறு பசுமையான நினைவுகள், தவிப்பு போன்றவை இதில் இருக்கும் என்பதை ட்ரைலர் உணர்த்துகிறது.
– இராமானுஜம்