இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படமும் வருகிற அக்டோபர் 10-ந்தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.
கோவையில் கொடிசியா அரங்கில் நேற்று மாலைநடைபெற்ற ‘மெய்யழகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா பேசுகிற போது “ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம்என கூறியவர் மேலும் கூறியதாவது’கங்குவா’ ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். ‘கங்குவா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார். அக்டோபர் 10 ஆம் தேதி கங்குவா வெளியாகும் என அறிவித்த பின் சில வாரங்கள் கழித்து வேட்டையன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் வேட்டையன் படத்துடன் நேரடியாக கங்குவா படத்தை களமிறங்குவது என்பதில் உறுதியாக சூர்யா தரப்பு இருந்தது. திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகும்போது திரையரங்குகள் ஒதுக்கீட்டில் நெருக்கடி ஏற்படும் என்பதை கங்குவா பட தயாரிப்பாளர், சூர்யா தரப்பிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் கங்குவா படத்தின் வெளியீட்டு தேதியை மாறுதல் செய்துள்ளது படக்குழு.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம் என சூர்யா குறிப்பிட்டது பெருந்தன்மையா, வஞ்சப்புகழ்ச்சியா என்பதே திரையுலகினர் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.
– இராமானுஜம்