ரைஸா நடத்திய ரௌசு

காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் பற்றிய அறிவிப்பை வெளியிடப்போவதாக நடிகை ரைஸா அறிவித்திருந்தார். ரைஸாவின் காதல் பற்றி ஜி.வி.பிரகாஷ், ஓவியா ஆகிய பலரும் வீடியோ வெளியிட்டு காத்திருக்கச் சொன்னதால், யார் அந்தக் காதலனாக இருக்கமுடியும் என திரையுலகமும் ரசிகர்களும் கவனிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், தனது காதல் குறித்த அறிவிப்பை நேற்று(14.02.2020) வெளியிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் ரைஸா. அது ரைஸா காதலிக்கும் ஒரு நபரைப் பற்றிய அறிவிப்பு அல்ல ரைஸாவின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு.

தமிழ் சினிமாவின் புரமோஷன் உத்திகளில், உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருப்பவர் தயாரிப்பாளாரான கலைப்புலி எஸ்.தாணு. பைரவி படத்தில் ரஜினிக்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்ததிலிருந்து முதல் முறையாக கபாலி படத்துக்கு விமானத்தில் போஸ்டரை ஒட்டியது வரை, தாணு அவர்கள் செய்தது தான் தமிழ் சினிமா புரமோஷன் உலகின் சாதனைகள்.

இத்தனை சாதனைகளை செய்தவருக்கு ‘V கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் ரைசா நடிப்பில் உருவாகும் காதல் திரைப்படத்துக்கு எப்படி புரமோஷன் செய்வதெனத் தெரியாதா?

ரைஸாவின் காதல் பற்றிய அறிவிப்பென வெளியான இந்தத் தகவல் பட்டி தொட்டியெங்கும் பரவியது. பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ரைஸா வில்சன், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு ஹரிஷுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். ஹரிஷின் இரண்டாவது படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இருவரும் காதலிப்பதாக பல வதந்திகள் பரவியதாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு வேறு திரைப்படங்கள் எதிலும் கமிட் ஆகாததாலும் ரைஸாவுக்கு விரைவில் திருமணம் என்றே முடிவு செய்திருந்தது சினிமா உலகம்.

ஆனால், விஷ்ணு விஷாலின் FIR, யுவன் தயாரிப்பில் ‘Alice’ ஆகிய படங்களில் கமிட் ஆனதன் மூலம் ரைஸாவின் காதல் இதுவரையிலும் சினிமா உலகிலிருந்து மாறவில்லை எனத் தெரியவந்தது. இப்போது அந்தக் காதல் ‘#LOVE’ என்ற திரைப்படத்தின் மீது மாறியிருக்கிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் ‘#LOVE’ திரைப்படத்தில் ரைஸா வில்சன், மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வால்டர் பிலிப்ஸுடன் ஜோடியாக நடிக்கிறார்.

சாம்.சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அட்லீயிடம் அசிஸ்டண்டாக பணியாற்றிய பாஸ்கோ பிரபு என்ற இயக்குநர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.