லப்பர் பந்து அதிகரிக்கும் வசூலும் அஸ்வின் பாராட்டும்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகியுள்ள  படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தாமல்  வெளியிடப்பட்டது. வணிகரீதியாக திரையரங்குகளில் முதல் நாள் வசூல் குறைவாகவே இருந்தது. படம் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள் ஒரே மாதிரியாக அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டை பெற்றது. இதனால் படத்தின் வசூல் முதல் நாளை விட 2-ம் நாள் இரண்டு மடங்காக அதிகரித்தது. தற்போது 2-ம் நாளை விட இரண்டு மடங்கு அதிகமாக 3-ம் நாள் கிடைத்திருப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.லப்பர் பந்துபடத்தின் தமிழக உரிமை 5 கோடி ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டது. தற்போதைய வசூல் நிலவரப்படி மூன்று நாட்களில் இந்த படம் சுமார் 4 கோடி ரூபாயை மொத்த வசூலாக பெற்றுள்ளது. வாரத்தின் இறுதியில் இந்த 5 கோடிரூபாய் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் பங்கு தொகையாக கிடைத்துவிடும் என்கின்றனர். அதற்கு பின்பு மொத்த வசூலாகும் தொகையில் கிடைக்கும் பங்குத்தொகை அனைத்துமே லாபம் தான் என்கிறது தயாரிப்பு தரப்பு. படம் பார்த்த இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள லப்பர் பந்து படத்தை ரியல் கிரிக்கட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்” நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் லப்பர் பந்து என பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது
 “இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன். ஆனால்,  பல வருடங்களுக்குப் பிறகு இன்றுநான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் க்ளிஷோக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பாலும் மையப்புள்ளியில் இருந்து விலகி, தான் சொல்ல விரும்புவதை தெரிவிக்க முனைகின்றன. அதனால்தான் ‘லப்பர் பந்து’ எனக்கு விசேஷமான படமாக தெரிகிறது. மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்” இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
– இராமானுஜம்