வரலாறு முக்கியம் – விமர்சனம்

தமிழ் சினிமா எப்போதுமே மலையாள சகோதரிகளை இழிவுபடுத்தித்தான் வருகிறது. இந்தக் கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.அந்தக்கால படங்களில் மலையாள சகோதரிகள் கிராமத்தில் டீக்கடை நடத்துவார்கள். அந்த டீக்கடையை சுற்றி கிராமத்து பெருசுகள், சிறுசுகள் சுற்றிச் சுற்றி வருவார்கள். மலையான சகோதரியின் உடை குறித்து, உடல் குறித்து காமெடியாக, ஆபாசமான வசனங்கள் இருக்கும். தமிழர்களின் வாழ்வியலுக்குள் மலையாள சகோதரிகளுக்கு வேறு இடமே இல்லையா? என்றுதான் கேட்கத் தோன்றும். அந்தக் காலத்தில் ஷகிலா மாதிரியான சில பாலியல் பட  நடிகைகளின் ‘காலைக் காட்சி’ படங்கள் மலையாள சகோதரிகளின் மீது இப்படியான ஒரு  பார்வையை தமிழ்நாட்டில் உண்டாக்கியதற்கு பெரும் பங்கு உண்டு.அதன் பிறகு அது சற்று குறைந்து இருந்தது. காலைக் காட்சி படங்கள் முடிவுக்கு வந்தது. மலையாள சகோதரிகள் மீதான பாலியல் பார்வை குறைந்தது, ‘காதலுக்கு மரியாதை’ மாதிரியான சில படங்கள் மலையாள குடும்பங்களை மதிப்பாகவும் காட்டியது.அதன்பிறகு கிட்டத்தட்ட மலையாள சகோதரிகள் மீதான இழிவான பார்வை முடிவுக்கு வரும் நேரத்தில் வந்திருக்கிறது ‘வரலாறு முக்கியம்’ என்கிற படம். இந்த படத்தின் அடிப்படையே படுகேவலமானது. முன்பு வெளியான ஷகிலாவின் காலைக் காட்சி படத்தை விட.கோயம்புத்தூருக்கு குடிவருகிறது ஒரு மலையாளி குடும்பம். அந்த குடும்பத் தலைவருக்கு இரண்டு மகள்கள். குடிவந்தவர் அந்த தெருவில் எந்தெந்த வீட்டில் மகன்கள் இருக்கிறார்களோ, அந்த வீட்டாரோடு நட்பு பாராட்டக்கூடாது என்கிறார். “மலையாள பெண்கள் என்றாலே ஒரு ஸ்பெஷல் கேட்டகிரி” என்று அவரே வசனம் பேசுகிறார். மலையாள பெண் குடிவந்த வீட்டிற்கு முன் தமிழ்நாட்டு இளைஞர்கள் திரண்டு நிற்கிறார்கள். 
அதைவிடக் கொடுமை அந்த குடும்பத்தின் தலைவியை கூட ‘கரெக்ட்’ பண்ண ஒருவன் வந்து நிற்கிறானாம். இது ஒரு மலையாள குடும்பத்தையே அசிங்கப்படுத்துகிற, அவமானப்படுத்துகிற வேலை அல்லவா?. கூடவே தமிழ் இளைஞர்களையும்.
ஒரு வேலையும் இல்லாமல் அப்பாவின் உழைப்பில் வாழும் ஹீரோவுக்கு, அவர் வசிக்கும் தெருவில் மலையாளப் பெண் வந்ததும் காதல் பொத்துக் கொண்டு வருகிறது. முதலில் தங்கையை காதலிக்கும் அவர், அக்கா தங்கையை விட அழகாக இருப்பதால் அக்காவுக்கு தாவுகிறார். அந்த மூத்த சகோதரியும் வேலைவெட்டி இல்லாத, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத ஹீரோவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவ்வளவு முட்டாள்களா மலையாள சகோதரிகள். 
அக்காவின் காதல் சரிப்பட்டு வராத ஒரு சூழ்நிலையில் தங்கை “அக்காதான் சரிப்பட்டு வரவில்லையே என்னை காதலி” என்று வீட்டு புறவாசலில் ஹீரோவை கட்டிப்பிடித்து கெஞ்சுகிறார். அட படுபாவிங்களா… என் மலையாள சகோதரிகள் அத்தனை தரம் கெட்டவர்களா? அறிவில்லாதவர்களா?.
படத்தின் கதை என்ன தெரியுமா?.  ஒரு அமைதியான நடுத்தர மலையாள குடும்பத்தின் தலைவன் மகள்களை படித்து ஆளாக்கி துபாயில்  நல்ல உத்யோகத்தில் இருக்கும் மணமகன்களுக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என்கிற கனவோடு கோயம்புத்தூரில் பேக்கரி வைத்து குடியேறுகிறான். 
அந்த குடும்பத்திற்குள் காதல் என்ற போர்வையில் புகுந்து அக்கா, தங்கை என இருவரையும் காதலித்து அந்த குடும்பத்தை நிம்மதி இழக்கச் செய்யும் ஒரு பச்சை தமிழ் இளைஞன். இதுதான் படத்தின் கதை.
இந்த படத்துல ஆக பெரிய அசிங்கம் என்ன தெரியுமா? வி.டி.வி கணேஷ் என்கிற ஒரு பெரிய மகாகலைஞனின் கேரக்டரும், அவரின் நடிப்பும், வசனமும்தான்.
ராத்திரியானால் ‘பிகர்’ (வயாக்கரா) மாத்திரை போட்டுக் கொண்டு ஒருத்தியோடு இரவை கழிப்பார், பெண் கிடைக்காவிட்டால் ‘அதை’ கையில் பிடித்துக்கொண்டு போகிற வருகிற பெண்களை பார்த்து ஜொள்ளு விடுவார். அவர் தனது அம்மாவை பார்த்து ஜொள்ளுவிடுகிற மாதிரி ஒரு காட்சி இல்லை அவ்வளவுதான்.
ஒரு கிராமத்துப் பெண் பகலில் நல்ல மதிப்போடு அந்த கிராமத்தில் நடக்கிறாளாம், இரவில் பாலியல் தொழில் செய்கிறாளாம். அந்த வீட்டுக்கு அரிப்பெடுத்து திரியும் ஹீரோ, மாமா விடிவி கணேஷ் உள்ளிட்ட நண்பர்கள செல்கிறார்களாம். ஒரு இக்கட்டான நிலையில் ஒருவர் மட்டும் மாட்டிக் கொள்ள மற்றவர்கள் தப்பித்து விடுகிறார்கள். மாட்டிக் கொண்டவர் அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்து கொண்டு விருப்பமே இல்லாமல் வாழ்கிறாராம். ஆக இவர்கள் அவமானப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது மலையாள சகோதரிகளை மட்டுமல்ல, தமிழ் சகோதரிகளையும் சேர்த்துதான்.