விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’. அருண்குமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
விக்ரம் மிகவும் எதிர்பார்த்த தங்கலான் வெற்றி பெறாத நிலையில் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஆக்ஷன் திரில்லர் படமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். மார்ச் மாதம் தொடக்கம் முதல் தமிழில் வெளியான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெறாத சூழலில் ‘வீரதீர சூரன்’ வெளியாவது திரையரங்குகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஆவடியில் உள்ள வேல்டெக் கல்லூரி வளாகத்தில் 20.03.2025 மாலை நடைபெற்ற நிகழ்வில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
முன்னோட்டம் எப்படி?
விக்ரமை கொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தேடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் முன்னோட்டம் தொடங்குகிறது.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதை முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், காட்சிகள் மூலம் அறிய முடிகிறது.
அனல் பறக்கும் சண்டைகாட்சிகள், ஜி.வி.பிரகாஷின் தெறிக்கும் பின்னணி இசை எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. விக்ரம் முழுமையான ஆக்க்ஷன் நடிகராக படம் முழுவதும் வலம் வருகிறார் என்பதை முன்னோட்ட காட்சிகள் அழுத்தமாக குறிப்பிடுகிறது. தொடர் தோல்வியில் இருக்கும் நடிகர் விக்ரமுக்கு’ வீரதீர சூரன்’கம்பேக் ஆக இருக்கும் என்று நம்பலாம்.