இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’ நாயகியாக கியாரா அத்வானி மற்றும்அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் 1:31 நிமிடம் ஓடக் கூடிய டீசர் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Related Posts
இந்த டீசரில் ஷங்கர் படத்திற்கே உரிய பிரமாண்ட காட்சிகள், அதிரடி ஆக்க்ஷன்கள் என டீசர் முழுக்க நிறைந்துள்ளது.
டீசர் எப்படி?
“பொதுவாக ராம் மாதிரி நல்லவன் எவனும் இல்ல; ஆனா கோபம் வந்தா அவன மாதிரி கெட்டவன் யாருமில்ல” என்ற பில்டப் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. பிரமாண்டமும், நடிகர்களின் அணிவகுப்பும், வித்தியாசமான பல கெட்டப்களும் டீசரில் கவனம் பெறும் அம்சங்கள். தெலுங்கு படம் என்பதால் ஆக்ஷன் காட்சிகளை ‘அன்லிமிட்ட’டாக வைத்திருக்கிறார் ஷங்கர். வேட்டி கட்டிக்கொண்டும், காலேஜ் ஸ்டூடண்ட் போன்றும், ஃபார்மல் உடையுடனும் பல வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார் ராம் சரண். உண்மையில் அவர் யார் என்பது தெரியவில்லை.
இறுதியில் “நான் கணிக்க முடியாதவன்” என அவர் சொல்வதை போல டீசர் காட்சிகள் படத்தின் கதையை கணிக்கவிடாமல் தடுக்கின்றன. அதேசமயம், ஷங்கரின் அதே ஃபார்முலா இந்தப் படத்தின் தன்மையை யூகிக்க வைக்கிறது. கலர்ஃபுல் பாடல்கள், பிரமாண்ட காட்சிகள், அதீத ஆக்ஷன், அரசியல் சார்ந்த சமூக கருத்துகள் என தனது முந்தைய படங்களின் மொத்த கலவையில் புதிய திரைக்கதையை உருவாக்கி தெலுங்கு கதாநாயகன் மூலம் கேம் சேஞ்சர் படமாக வழங்க இருக்கிறார் என்பது தெரிகிறது.