உயிரின் மகத்துவத்தையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட்.
நாயகி கோபிகாரமேஷ் புதுமுகம் என்று சொன்னால்தான் தெரியும்.இளமை வேகத்தில் பறந்தாலும் தாய்மை வந்ததும் பொறுப்பானவராக மாறுகிறார்.தன் மீது சந்தேகநிழல் படிவதை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவிக்கும் நேரங்களில் நல்ல நடிப்பையும் கொடுத்துவிட முடியும் என்று நிருபித்திருக்கிறார்.
ரெடின்கிங்ஸ்லிக்கு முக்கியமான வேடம்.சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அந்த வேடத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
அருணாச்சலேஸ்வரன், ஃபௌசியா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரஞ்சி பணிக்கர், ரிது, கவிதா, மைதிலி, காயத்ரி, காத்தாடி ராமமூர்த்தி, துளசி என படத்தில் நிறைய நடிகர்கள்.அனைவரையும் அளவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதையில் இருக்கும் இளமை காட்சிகளிலும் தெரிகிறது.போகப்போக கதையின் கனம் கூடும்போது அது காட்சிகளிலும் எதிரொலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தைத் தயாரித்திருப்பதோடு இசையமைக்கவும் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.பாடல்கள் நன்று.பின்னணி இசை திரைக்கதையை உயர்த்திப் பிடித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் தமிழரசன், திரைக்கதையோட்டத்தைத் தெளிந்த நீரோடை போலக் கொண்டு சென்று கனத்த இதயத்துடன் அனைவரையும் அனுப்ப வேண்டும் என முடிவு செய்து அப்படியே செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.இந்தத் தலைமுறையின் இளைஞர்களும் யுவதிகளும் வாழ்க்கையை எவ்வளவு மேம்போக்காக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்த்தி அதேசமயம் மரபின் தொடர்ச்சியாக அவர்களுக்குள் உறைந்திருக்கும் உயிர்நேயத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகன் நாயகி மட்டுமின்றி படத்தில் நடித்திருக்கும் எல்லாக் கதாபாத்திரங்களையும் மையக்கருவுக்கு உரமிடுவது போன்றே வடிவமைத்து அதற்கேற்ற நடிகர் நடிகையரை நடிக்க வைத்திருப்பது அவருடைய தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.