ஹனுமான் – திரை விமர்சனம்

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K.நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீமதி சைத்தன்யா வெளியிட்டிருக்கும் ஹனுமேன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 அன்று வெளியாகியுள்ளது.

தேஜா சஜ்ஜா நாயகனாகவும், அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில்  வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: சிவேந்திரா
இசை :கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப்
படம் எப்படி?
 இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகியுள்ள இந்த ‘ஹனுமான்’ படத்தின் கதை அடிப்படையில் ‘அஞ்சனாத்ரி’
என்ற ஊரில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க சிஜியில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12.01.2024 அன்று தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பானீஸ் என்று 10 மொழிகளில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ பிளஸ் தெய்வ சக்தி கலந்த படம்தான் இந்த ‘ஹனுமான்’. ஆங்கிலத்தில் (Hanu Man) என வித்தியாசம் காட்டியதற்கு படத்தில் தெளிவான அர்த்தமும் உள்ளது.

பான் இந்தியா படம் போல பல மொழிகளில் மொழி மாற்றம்செய்யப்பட்டு இருக்கும் இந்த படம், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவிருக்கும் நேரத்தில் வெளியாகி சர்வதேச கவனத்திற்குள்ளாகியுள்ளது
‘அஞ்சனாத்ரி’ என்னும் ஊரில் ‘ஹனுமந்தா’ என்ற தேஜா, தனது அக்கா ‘அஞ்சம்மா’வுடன்(வரல‌ஷ்மி சரத்குமார்) உடன் வாழ்ந்து வருகிறார்.சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்த தேஜாவை, வரலட்சுமிதான் தாய் போல  வளர்த்திருக்கிறார். தன்னைக் கல்யாணம் செய்ய விரும்பும் மாப்பிள்ளைகளிடம் “எனது தம்பியையும் உடன் அழைத்து வருவேன்” என்று அவர் நிபந்தனை விதிப்பதால் அவருக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை.
ஆனால் தேஜாவோ இது எதைப் பற்றியும் கவலையில்லாமல், ஊருக்குள் ஒரு திருடனாக, ரவுடியைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அந்த ஊரின் தெய்வமான ஹனுமானின் ரத்தத் துளிகள் அடங்கிய ஒரு சிமிழ் ஹனுமந்தாவின் கைகளுக்குக் கிடைக்கிறது.அந்த சிமிழில் இருக்கும் சக்தி பகல் நேரத்தில் மட்டுமே செயல்படும். அதன் சக்தி ஹனுமந்தாவின் கண்களுக்குள் ஊடுறுவியவுடன் ஹனுமானின் பலம் ஹனுமந்தாவுக்கு வந்து விடுகிறது. இதை வைத்து அந்த ஊரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஊர்த் தலைவனை மல்யுத்தத்தில் வெல்கிறான் ஹனுமந்தா.

இதேபோல் தனது சக்தியைக் காட்ட ரயிலையே வேறு டிராக்குக்கு மாற்றியனுப்புகிறான் தேஜா. இதை வீடியோவில் பார்க்கும் வில்லன் வினய் அந்த சக்தி தேஜாவுக்கு எங்கேயிருந்து வந்தது..? எப்படி வந்தது..? என்பதை அறிவதற்காக அந்த ஊருக்கு தனது படை, பரிவாரங்களுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.

சிறு வயதில் இருந்தே சூப்பர்மேன் ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவுக்காக தனது பெற்றோரையே உயிரோடு எரித்துக் கொன்ற வினய், தனது மருத்துவ நண்பர் வெண்ணிலா கிஷோரை அருகில் வைத்துக் கொண்டு பலவித சோதனைகள் செய்து தனது உடலுக்கு வலு ஊட்டும் மருந்துகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரம் ஹனுமந்தாவின் சக்தி பற்றிய ரகசியமும் கிடைத்தால் தான் வெகு விரைவில் சூப்பர்மேன் ஆகிவிடலாம் என்னும் கணக்கில் அந்த ஊரிலேயே தங்கியிருந்து அந்த சக்தியை ஹனுமந்தாவிடமிருந்து பறிக்க திட்டம் தீட்டுகிறார் வினய்.

வினய்யின் இந்தத் திட்டம் பலித்ததா..? ஹனுமந்தா அந்த சக்தியை வினய்யிடம் கொடுத்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் ஒருவரி திரைக்கதை.

தெலுங்குலகின் மிக இளம் வயது நடிகரான தேஜா பார்க்க அழகாக, ஸ்லிம்மாக, சாக்லேட் பாய் போன்றிருப்பதால் பெருஞ்சாதனைகளை சாதாரணமாக செய்ய முடியாதவராக இருப்பதால், இந்த ஹனுமானின் சக்தி கிடைத்தவுடன் அவர் பெரும் வீரனாவதை நம்மால் ஏற்க முடிந்திருக்கிறது.,
எதைப் பற்றியும் கவலைப்படாத, ஜாலியான இளைஞனாகவும், பின்பு அக்காவின் பாசமறிந்து அன்புத் தம்பியாக மாறி நடித்திருப்பது, திரைக்கதையில் வேகமாக இருந்தாலும் அப்படியே ஏற்க முடிந்திருக்கிறது.
ஹனுமாரின் சக்தி கிடைத்தவுடன் செய்யும் செயற்கரிய செயல்களின்போது காட்டும் நடிப்பு சிம்ப்ளி சூப்பர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் குப்பையாகும் என்பதால் அந்த நடிப்பைக்கூட கொஞ்சம் அளவு குறைத்துதான் வெளிப்படுத்தியுள்ளார்.

அம்ரிதாவுடனான காதல் பள்ளிக்கூடத்தில் இருந்தே துவங்கியது என்பதால் அதையும் நாம் ஏற்க வேண்டியதுதான். காதல் காட்சிகளில் இவர் காட்டும் அளவுக்கான நடிப்பைக்கூட அந்த காதலி காட்டவில்லை என்பதுதான் உண்மை.மருத்துவராக ஊருக்குள் வந்து நியாயம் கேட்கும் ஹீரோயின் அம்ரிதா, ஹீரோவுக்கு பொருத்தமானவராக இருப்பதால்தான் தேர்வாகியுள்ளார் என்பது தெரிகிறது. அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.பாசமான, பொறுப்பான அக்காவான வரலட்சுமி சரத்குமாரின் கோபம் கலந்த பாசத்தைக் காட்டும் நடிப்பு டபுள் ஓகே. கடைசியில் தம்பிக்காக உயிரைவிட்டு தியாகியாகும் காட்சி மனதைத் தொடுகிறது. அங்கே தொடங்கும் கிளைமாக்ஸ் காட்சிக்கு இந்த மரண காட்சியே உயிர்ப்பினைக் கொடுத்திருக்கிறது.
வில்லனாக தமிழ் நடிகர் வினய். சின்ன வயதில் இருந்தே சூப்பர்மேன் மீது வெறியாய் இருப்பவர் இப்போது அந்தப் பவர் கிடைப்பதற்கு குறுக்கே யார் வந்தாலும் அழிப்பேன் என்று செயலில் காட்டும் அவருடைய ஆக்சன் சீக்வன்ஸ்கள் அனைத்தும் அமர்க்களம்.கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் அவர் காட்டியிருக்கும் வெறித்தனமும், நடிப்பும்தான் ஹனுமாரின் ஹீரோயிஸத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.
படத்தில் அவ்வப்போது இடையிடையே வரும் குரங்குக்கு, ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா குரல் கொடுத்திருப்பதும் பெரிய பலம். இந்தக் குரங்கும் திரைக்கதையில் ஒரு டர்னிங் பாயிண்ட்டை செய்திருக்கிறது.முதலில் கெட்டவராகவும், பின்பு நல்லவராகவும் வந்து படத்தை நல்லபடியாக முடித்து வைக்க உதவியிருக்கிறார் வெண்ணிலா கிஷோர்.ஒரு சூப்பர் ஹீரோவின் கதையில் ஆன்மிகத்தை அழகாக கலந்து, வியாபார ரீதியாகவும், பக்தி மார்க்கமாகவும் பக்காவாக பிளான் போட்டு திரைக்கதையை உருவாக்கியவிதத்திலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார் இயக்குநர்.
வெறும் 10 கோடி பட்ஜெட்டில், 100 கோடி பட்ஜெட் படத்துக்கு டஃப் கொடுக்கும்விதமாக விஷுவல் எஃபெக்ட்ஸ் கலந்து கட்டி அடித்திருக்கிறது.
படத்தின் பரபரப்பு பேச்சுக்கும், வெற்றிக்கும் காரணம் படத்தில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள்தான். ‘ஆதி புருஷ்’ படத்தைவிடவும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் சிஜி காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளன. அதிலும், கிளைமேக்ஸ் சண்டை நடக்கும்
20 நிமிட காட்சிகள் உச்சக்கட்டத்திற்குள் ரசிகர்களை தள்ளுகிறது.சிவேந்திராவின் ஒளிப்பதிவு படத்தின் துவக்கத்தில் அந்தக் காட்டையும், ஊரையும், நதியையும், பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையையும் காண்பிக்கும்போதே நம்மை அசர வைத்துவிட்டது.
அந்தக் கிராமத்தை உருவாக்கியவிதமும் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலையை மலையுடன் பொருந்தியிருப்பது போன்ற வடிவமும் பாராட்டுக்குரியது. கலை இயக்குநரும், கிராபிக்ஸ் வல்லுநர் குழுவும் ஒரு சேர பாராட்டைப் பெறுகிறார்கள்.படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகளும், மயக்க வாயு வீசும் காட்சிகளும் குழந்தைகளின் மனதைக் கெடாத வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது நன்று.மூன்று பாடல்களும், இசையும் தாளம் போட வைக்கின்றன என்றாலும், பொருத்தமில்லாத இடங்களில் வந்து நமது பொறுமையை சோதிக்கின்றன. ஆனால், இந்தப் பாடல்களை படமாக்கியவிதம் மட்டும் நம் கண்களுக்குக் குளிர்ச்சியாகவுள்ளது.
வழக்கமான சூப்பர் ஹீரோவுக்கான டெம்பிளேட் கதை, மற்றும் இந்த ஊர் எங்கேயுள்ளது என்ற தகவல் இல்லாதது.. மருத்துவம் படித்து ஊருக்குள் வரும் அளவுக்கு வசதிகள் உள்ள இந்த ஊருக்குள் போலீஸ் ஸ்டேஷனே இல்லாதது.. இன்னமும் தலைவர் முறையில் அந்தக் கிராமம் வாழ்ந்து வருவது.. இன்னமும் ஒரு ஆஸ்பத்திரிகூட இல்லாதது.. என்று பல செயற்கைத்தனங்கள் நிறைந்த திரைக்கதையுடன், தேவையில்லாமல் குறுக்கே வந்து கட்டையைப் போடும் பாடல்கள் என்று பலவிதமான கேள்விகள் நமக்குள் எழுந்தாலும் அதையும் கடந்து ஹனுமேன் ரசிக்ககூடியவரே.