அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

சென்னை புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கைதியாக இருக்கும் நாயகன் உதயா.அந்தப் பயணத்திலேயே அவரைக் கொலை செய்ய ஒரு குழு முயல்கிறது.காவல்துறையில் ஒரு பிரிவினரும் அவரைக் கொல்ல முயல்கிறார்கள்.இந்த உதயா யார்? அவரை ஏன் கொல்ல வேண்டும்? ஆகிய கேள்விகளுக்கான பதில்தான் அக்யூஸ்ட் படம்.

கணக்கு என்கிற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் உதயா, கலகலப்பும் துறுதுறுப்புமாக அறிமுகமாகிறார்.காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா கலகேரி நடனம் மற்றும் நளினக் காட்சிகள் மட்டுமின்றி நடிப்பிலும் நிறைந்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் அஜ்மல் அதற்கேற்ற மிடுக்கை தோற்றத்திலும் நடிப்பிலும் காட்டியிருக்கிறார்
அஜ்மலின் கைபேசி மூலம் வரும் சாண்டிகாவும் கவனம் ஈர்க்கிறார்.
நகைச்சுவைக்கு யோகிபாபு இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் பவன், அவர் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, அவருடைய தம்பியாக நடித்திருக்கும் ஸ்ரீதர் ஆகியோரில் பவன் நல்லவராகவும் மனைவியும் தம்பியும் எதிர்மறையாகவும் நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.தயா பன்னீர்செல்வம், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் தீபா பாஸ்கர், அரசியல்வாதியாக நடித்திருக்கும் டி.சிவா ஆகியோரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மருதநாயகத்துக்கு தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதைக்களம் அமைந்திருக்கிறது.சண்டை மற்றும் சாலைக் காட்சிகளில் அவருடைய உழைப்பு வெளிப்பட்டிருக்கிறது.

நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணிஇசை ஒலிக்கும்போது யார் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் யார்? எனக் கேட்க வைத்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவின், படம் சலிப்பின்றி நகரவேண்டும் என்பதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ஸ்ரீனிவாஸ்.சமுதாயப் பார்வையுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் குறைகளைத் தாண்டி படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார் உதயா.