ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான திரு. டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.
அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இந்து ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார். காமெடி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் அமெரிக்க ஆவி.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் குணால் நெப்போலியன் பேசுகையில்,
”இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ..இது வேற மாதிரியான படம். தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தான் முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம். அமெரிக்காவில் வாழும் நம்முடைய இனத்தினரிடம் இவ்வளவு திறமைகள் மறைந்திருக்கிறது என்பதை காணும் போது ஆச்சரியமாக இருந்தது. இது சின்ன விசயம் அல்ல. அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கான வேலையை செய்து கொண்டே கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் இப்படத்தில் பணியாற்றினார்கள்.
‘அமெரிக்க ஆவி’ என்ற டைட்டிலை பற்றி சொல்ல வேண்டும். ஆவி என்றால் நாம் பேய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. அதே தருணத்தில் ஆவி என்பதற்கு அமெரிக்காவை பொறுத்தவரை மற்றொரு பொருளும் இருக்கிறது. அமெரிக்காவில் பல நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள். முயற்சி செய்து வெற்றி பெறுபவர்கள். அந்த கோணத்திலான பொருளும் இப்படத்தில் கதாபாத்திரங்களாக இடம் பிடித்திருக்கிறது. எனவே இந்த படத்தில் பேயும், பிசாசும் இருக்கிறது அத்துடன் சுவாரசியமான மற்ற விசயங்களும் இருக்கிறது.
இந்தப் படத்தில் மற்றொரு சுவராசியமான விசயமும் இருக்கிறது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தனுஷ் நெப்போலியன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால்.. அவர் தான் எனக்கு முதலாளி. அவரால் இங்கு வர இயலவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியின் நேரலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்.
நடிகர் நெப்போலியன் பேசுகையில்,
”இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என
தோராயமாக 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.
இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் – டாக்டர்கள் – சயின்டிஸ்ட்- புரொபசர்ஸ்- என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.
இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம்.
சிவாஜி சார் நடித்த ‘பாரத விலாஸ்: படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்.
1994 ஆம் ஆண்டில் சன் டிவி நேரலை காட்சி தொடங்கிய போது, நானும், இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்கு சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக் குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.
இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் பேசுகையில்,
” நான் ஒன்பது வயதிலேயே பழைய ஃபிலிம் வைத்து சூரிய ஒளி மூலம் சுவற்றில் அந்த படத்தை காண்பித்திருக்கிறேன். இதுதான் என்னுடைய தொடக்க கால பிலிம் டைரக்க்ஷன் ஆர்வம். அதற்கு பின் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தேன். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன். அங்கு இருந்த காரணத்தினால் சினிமா பற்றிய தொடர்பு துண்டித்து போய்விடுமோ..! என பயந்தேன். அதற்காக இப்போதும் பல கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் ஒரு முறை நெப்போலியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்னால் தனுஷை விட்டுவிட்டு வெளியில் வந்து நடிக்க முடியாது என்றார். அந்தத் தருணத்தில் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா? அதற்கான கதை இருக்கிறதா? என கேட்டார். அதன் பிறகு மதிய உணவு அருந்தினோம். அத்துடன் அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டை காண்பித்தார். மூன்றரை ஏக்கரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான வீடு அது. மரங்களுக்கு நடுவே அழகாக அமைந்திருந்த அந்த வீட்டை பார்த்ததும் ஆங்கில திரைப்படங்களில் வருவதை போல் இருந்தது. அதன் பிறகு இந்த வீட்டை மையப்படுத்தி ஏதேனும் கதையை உருவாக்க முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து கதையை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அப்போது அவர் இது வழக்கமான ஹாரர் படமாக இருக்கக் கூடாது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருக்க வேண்டும் என்றார்.
அதற்குப் பிறகு ஒரு கதையை உருவாக்கினோம். அந்தக் கதையை நெப்போலியனும், அவரது வாரிசுகளான குணால் – தனுஷ் என அனைவரும் இணைந்து அட்டகாசமான திரைக்கதையாக உருவாக்கினோம்.
*ஒளிப்பதிவாளர் ‘நேஷ் வில்’ பிரபு பேசுகையில்,*
” என்னுடைய முழு பெயர் பிரபு தொப்புடு அமரேசன். என்னுடைய தாத்தா டி.எஸ். அமரேசனுக்கு நன்றி. அவர் ஆர் எஸ் மனோகர் நடித்த மேடை நாடகங்களை இயக்கியவர். 1920 களில் அவர் மறைந்து விட்டார். அவர் இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்.
நான் சென்னையில் தற்போது பிரபலமான ஒளிப்பதிவாளர்களாக திகழும் மனோஜ் பரஹாம்சா, அறிவழகன் ஆகியோரின் அறையில் தான் நான் இருந்தேன். அதனால் கேமரா லென்ஸ், லைட்ஸ் அதைப்பற்றி எல்லாம் தெரியும். அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்றபோது அங்கு நடைபெறும் சிறிய நிகழ்வுகளை எல்லாம் கேமரா மூலம் பதிவு செய்தேன். அப்போதுதான் நெப்போலியன் அறிமுகமானார். அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்கெல்லாம் கேமரா மேனாக இருந்தேன். அதன் பிறகு தான் ஜப்பானில் தனுஷின் கல்யாணம் நடைபெற்ற போது அதனை பதிவு செய்தேன். அப்படி என்னை படிப்படியாக மெருகேற்றி தற்போது ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி” என்றார்.