எக்ஸாம் – வலைத்தொடர் விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஆள் மாறாட்ட கதைகள் ஏராளமாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளன அந்த வரிசையில் வலை தொடராக தயாரிக்கப்பட்டிருக்கிறது எக்ஸாம்.
நாட்டில் நடைபெற்று வரும் தேர்வு மோசடி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர் பதவிக்கு செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று அது சம்பந்தமாக வழக்குகள் பதிவாகியுள்ளது. அதன் பாதிப்பில் திரைக்கதை எழுதப்பட்டு வலை தொடராக வெளியாகியிருக்கிறது’ எக்ஸாம்’

அதிகம் தொடர்பு கொள்ள முடியாத மலைப்பகுதியில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்தி மறைத்துவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.

ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து அதிகாரத்தைப் பிடித்து அவர் என்ன சாதிக்கிறார்  என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது வலைதொடர்.

துஷாரா விஜயன் காவலதிகாரிக்குரிய மிடுக்கு,துணிவு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் நடிப்பிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

காவல்திகாரியாக நடித்திருக்கும் அதிதிபாலனும் குறைவில்லை.அவரும் அந்த வேடத்துக்கேற்ற அம்சங்களைச்  வெளிப்படுத்தியிருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் அவருடைய வேகம் வியக்க வைக்கிறது.

ஜெயிலராக நடித்திருக்கும் அப்பாஸ் பொறுப்பாக நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வசுந்தரா,நரேன் மணி ஆகியோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு,
சாம்.சி.எஸ் இசை,தொடரின் தரத்தை உயர்த்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது.

ஏ.ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். முதல் மூன்று பாகங்களில் இருக்கும் விறுவிறுப்பு அடுத்த இரண்டு பாகங்களில் சற்று குறைந்துவிட்டது.

எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.சற்குணம். அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி யுபிஎஸ்சி ஆகியனவற்றில் நடக்கும் அட்டூழியங்களைச் சொல்லி அதிர வைக்கும் மையக்கருத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
காவல்துறையில் ஆள்மாறாட்டம் செய்து அதைத் தேடிப் பிடித்து வெளிப்படுத்தும் திரைக்கதை அமைத்து மர்மம் திகில் ஆகிய வகையில் அமைந்திருப்பது தொடருக்குப் பலம்.அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்புடனே வைத்திருப்பதும் இயக்குநருடைய பலம்

அடித்தட்டுகுடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுக்கும் அரசுப்பணிக்கான தேர்வுகள்.அதைச் சரியாக எழுதி வெற்றி பெற்று அரசு வேலைக்குப் போனால் நம் தலைமுறையையே முன்னேற்றி விடலாம் என்கிற கனவோடு கடின உழைப்பைச் செலுத்திப் படித்து, அந்தத் தேர்வுகளை எழுதிவிட்டுக் காத்திருக்கிறார்கள்.
அதிலும், பணமுதலைகள் உள்நுழைந்து பணம் கொடுத்துப் பதவிக்குப் போய்விடுகின்றனர் என்கிற கொடூரங்கள் நிகழ்கின்றன என்பதை வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டியிருக்கிறார் ஏ.சற்குணம்.