கமல்ஹாசன் வெளியிட்ட “லெவன்” திரைப்பட முன்னோட்டம்

 

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் 29.04.2025 ஆம் தேதி மாலை நேரத்தில் நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘லெவன்’ டிரெய்லரை  கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றுள்ளனர்.
மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட  திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில்,
 ” நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்கு காட்சிகள் திரில்லிங்காக இருக்கிறது. இமானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு. இந்நிறுவனம் தயாரித்த இந்த மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில்,
 ”நீண்ட நாட்கள் கழித்து அரசாங்க அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கலையரங்கத்தில் நடைபெறும்
இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் இமான். அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நண்பராக இருப்பவர்.  இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். சிறப்பாக இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து கொடுத்திருக்கும் பாட்டும் நன்றாக இருக்கிறது. இப்படத்தின் நாயகன் நவீன் மிகச் சிறந்த திறமைசாலி. அவருடைய திறமையை தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன். முன்னோட்டத்தில் சில காட்சிகளை பார்த்த உடனே இவருடைய திறமை வெளிப்பட்டது.‌ இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில்,
” லெவன் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். இன்ட்ரஸ்டிங்கான திரில்லர் திரைப்படம். இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்க்கும்போதுதான் படத்திற்கு ஏன் ‘லெவன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட்டை வாங்கி பார்க்கிறார்கள். ஆனால் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு அனைவரும் ஒன்று கூடி விவாதித்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சங்கடங்கள் இருக்கிறது. ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை – இந்த மூன்று நாட்களில் தான் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. அதனால் சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை பரீட்சார்த்தமாக சோதனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகை ரித்விகா பேசுகையில்,
“இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ” என்றார்.
தயாரிப்பாளர் டி . சிவா பேசுகையில்,
 ”தயாரிப்பாளர் அக்பர் தைரியமானவர். தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். அவர் தயாரித்த இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார்கள்.  ‘லெவன்’ திரைப்படம், ‘ராட்சசன்’ படத்தை போல் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.
 ஃபாஸ்டஸ்ட் – எக்கனாமிக்- பிரண்ட்லி-  லவ்லி – மியூசிக் டைரக்டர் இமானுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும்,” என்றார்.
நடிகை ரியா ஹரி பேசுகையில்,
 ”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான்.‌ அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமான் சாரை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். அவருடனான சந்திப்பின்போது எப்போதும் ஒரு பாசிட்டிவிட்டியை பரவச் செய்து கொண்டிருப்பார். அவரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.
அவருடைய இசையில் முதல் பாடல் உருவான‌ போது இதுதான் என்னுடைய ஃபேவரிட்டான பாடல் என சொன்னேன்.‌ இரண்டாவது பாடல் உருவான போது இந்தப் பாடல் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றேன். அதன் பிறகு காத்திருங்கள் தொடர்ச்சியாக பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது அனைத்து பாடல்களையும் கேளுங்கள் என்றனர். எனக்கு எல்லா பாடல்களும் பிடித்திருக்கிறது.
இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்த திரைப்படம் திரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம்”
 என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ‘
‘நான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரைப்படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு கிரைம் ஆக்க்ஷன் திரைப்படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷ‌யம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு திரைப்படங்களை தான் இந்த வகையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன்” என்றார்.
நடிகை அபிராமி பேசுகையில்,
 ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் அழகான பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில்,
நான் ஊதா கலர் ரிப்பனின் ரசிகன். நான் எல்லா தருணத்திலும் முணுமுணுக்கும் பாடல் அது. இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார்.
அவர் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.‌ அத்துடன் பிரபு சாலமன்- இமான் ‍ அக்பர் –  இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும்.  அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். அதனால் தான் படத்தை தயாரித்திருக்கிறார்.  இந்தப் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் நன்றாக இருந்தன‌. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் ரசிகர்களை எப்படி இருக்கை நுனியில் வைத்திருந்தனவோ அதேபோல் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில்,
”  திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ டி டியில் படங்களை பார்க்கும் போது ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்களை தான் விரும்பி பார்ப்பேன். உச்சகட்ட காட்சி வரை ஆர்வம் குறையாமல் பார்க்கலாம்.
நான் இயக்குநர் சுந்தர் சி உடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அந்த தருணத்தில் அவருடைய உதவியாளர்களும் இருப்பார்கள். அவர்களும் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் லோகேஷ் என்னை சந்தித்து நான் சுந்தர் சி உதவியாளர். ஒரு கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டபோது, நான் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னராக தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கதையை கேட்கும் போது பக்காவான க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்தது.  கதை கேட்டு முடித்ததும் அவரிடம் முதலில் இந்த கதைக்கு என்னை எப்படி யோசித்தீர்கள் எனக் கேட்டேன். இதுவரை நீங்கள் இந்த ஜானருக்கு இசை அமைக்கவில்லை. நீங்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
ஒருஎன்றார்.
இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில்,
 ”தயாரிப்பாளர் அக்பருடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.‌ இந்தப் படத்தின் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேடத் தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அற்புதமான நடிப்புத் திறமை உள்ள நவீன் சந்திரா இந்த கதைக்குள் வந்தார். கதாபாத்திரத்தை திரையில் கச்சிதமாக காட்சிப்படுத்துவதில் திறமையானவர் நடிகர் நவீன் சந்திரா என்பதை படம் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் சொல்வீர்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக படத்திற்குள் வந்தனர்.
இந்த படத்தை எனக்கு நெருக்கமாக உணர வைத்தது கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு தான். இதுபோன்ற திரைப்படங்களுக்கு ஒளி சூழல் முக்கியமானது.‌ அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது” என்றார்.