குற்றம் தவிர் முன்னோட்டம் வெளியீட்டு விழா

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்
ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.
‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா 27.04.2025 அன்று மாலை சென்னையில நடைபெற்றது.
முன்னோட்டம் மற்றும்
பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது,
“இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை .
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு  நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .
அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து படம் எடுக்க  இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றார்.