சர்கார் பட விவகாரத்தில் சன் டிவி வழக் கு தள்ளுபடி ஸ்ரீப்ரியாவுக்கு சாதகமாக தீர்ப்பு
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற நிலையில், 2018-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி இரு தரப்பினரும் சமரச ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன் அடிப்படையில் சொத்துகளை சன் டிவி நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கும்ஒப்புக்கொள்ளப்பட்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கும் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையே தனியாகப் பணப் பிரச்சினை ஏற்கனவே இருந்தது. இது தொடர்பாக மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் ராமசாமி தரப்பில் உரிய பண உத்தரவாதம் வழங்கப்படாததால், அவரது சொத்துகள் மீது 2020-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. பின்னர் இந்த உத்தரவு 2020-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டது.
அதாவது, மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொடர்ந்த பண வசூல் நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதற்கு நீதிமன்றத்தின் மூலம் சட்டக் கட்டுப்பாடு ஏற்பட்டது.
ஆனால், 2018-ம் ஆண்டு சன் டிவி தரப்பில் செய்துகொள்ளப்பட்ட சொத்து உத்தரவாத ஒப்பந்தங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே 2020-ம் ஆண்டு மெரினா ஹோல்டிங்ஸ் தொடர்ந்த வழக்கில் அந்தச் சொத்துகள் மீது நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. அதன் பிறகே, 2021-ம் ஆண்டு சன் டிவி அந்தச் சொத்துகளைப் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரங்கள் மூலம் வாங்கியது. இதனால் சொத்துகள் மீது ஏற்கெனவே உரிமை இருந்ததாக சன் டிவி கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதனால் ஒரே சொத்துகள் தொடர்பாக சன் டிவி நிறுவனத்துக்கும் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையே சட்டப் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், சன் டிவி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அதில், 2018-ம் ஆண்டிலேயே ராமசாமி தரப்புடன் தங்களுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாகவும், மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வழக்கில் சொத்துகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு முன்பே தங்களுக்கு உரிமை உருவாகிவிட்டதாகவும் சன் டிவி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், தாங்கள் சட்டப்படி சொத்துகளை வாங்கியுள்ளதால், அவற்றின் மீதான நீதிமன்றக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதற்கு மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. சன் டிவி நிறுவனம் நம்பியிருக்கும் 2018-ம் ஆண்டு உத்தரவாத ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும், அவற்றைக் கொண்டு சொத்துகள் மீது ஏற்கெனவே உரிமை ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றும் மெரினா ஹோல்டிங்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், சொத்துகள் மீதான நீதிமன்றக் கட்டுப்பாடு 2020-ம் ஆண்டிலேயே சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, 2021-ம் ஆண்டு சொத்துகளை வாங்கிய சன் டிவி நிறுவனம், அந்தக் கட்டுப்பாடு குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, சன் டிவி நிறுவனம் முன்வைத்த வாதங்களை ஏற்க மறுத்தார். ஒரு சொத்தின் மீது நீதிமன்றம் கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பே மற்றொருவருக்கு அந்தச் சொத்தில் சட்டப்பூர்வமான உரிமை ஏற்பட்டிருந்தால், அந்த உரிமைக்குப் பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், அதற்கான சொத்து பரிமாற்ற ஒப்பந்தம் நீதிமன்றக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் சன் டிவி நிறுவனம் நம்பியிருந்த 2018-ம் ஆண்டு உத்தரவாத ஆவணங்கள் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அந்த ஆவணங்களின் அடிப்படையில் சொத்துகள் மீது முன்பே உரிமை ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், 2018-ம் ஆண்டு இரு தரப்பினரும் செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தை எதிர்த்து, அதில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் மோசடி மற்றும் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
அந்த வழக்கில் ஆவணங்களைத் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, இரு தரப்பினரும் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி புதிய சமரச ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
சன் டிவி மனு டிஸ்மிஸ்
இந்தப் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சொத்துகள் சன் டிவி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால் புதிய சமரச ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே, மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துகள் மீது நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துவிட்டது. எனவே, நடைமுறைப்படுத்தப்படாத 2018-ம் ஆண்டு சமரச ஒப்பந்தத்தைக் காட்டி, சொத்துகள் மீது முன்பே உரிமை ஏற்பட்டுவிட்டதாக சன் டிவி நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, சொத்துகள் மீதான நீதிமன்றக் கட்டுப்பாட்டை நீக்கக் கோரி சன் டிவி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கே.குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.