வங்கிக் கொள்ளை, ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சூழ்ச்சியான முறையில் பணம் சம்பாதித்தல் ஆகியன குறித்து வரும் திரைப்படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டார்ஸ்.
ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் நாயகன் வைபவ்.
ஒரு முறைகேடான வேலையைச் செய்கிறார் வைபவ்.அதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.அதைச் சரிசெய்யப் போய் இன்னொரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.அது என்ன? அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.
நாயகனாக நடித்திருக்கும் வைபவ், தனது அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டே அடப்பாவித் தனமான வேலைகள் செய்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அதுல்யாரவி,ஆக்சன் படங்களில் நாயகிகளுக்குரிய குறைவான இடத்தையே பெற்றிருந்தாலும் அதிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வைபவ்வின் நண்பராக வரும் மணிகண்டா ராஜேஷ், கொள்ளையர்களாக நடித்திருக்கும் ஆனந்தராஜ்,ஜான்விஜய்,மொட்டை ராஜேந்திரன்,சுனில் ரெட்டி ஆகியோருடன் ரெடின் கிங்ஸ்லியும் இணைந்திருக்கிறார்.இவர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு பார்வையாளர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்று முயன்றிருக்கிறார்கள்.
லிவிங்ஸ்டன், ஹூசைனி,பிபின்,சாம்ஸ் உள்ளிட்டோரின் வேடங்களும் அவர்களுடைய நடிப்புகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவு செய்திருக்கும் டிஜோடோமி, திரைக்கதையில் இருக்கும் நகைச்சுவையைக் காட்சிகளிலும் கொண்டு வர முயன்றிருக்கிறார்.
டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் கதை சொல்லும் கருத்துகளுக்கு வலிமை சேர்த்திருக்கிறார்.
படத்தைத் தொகுத்திருக்கும் சுரேஷ் ஏ.பிரசாத், எந்தக் காட்சியை விடுவது எந்தக் காட்சியைச் சேர்ப்பது என்று தடுமாறியிருக்கிறார்.
டான் அசோக்கின் சண்டைக்காட்சிகள் நாயகன் வைபவ்விற்குப் பலம்.
விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண்கேசவ் ஆகியோர் எழுதி இயக்கியிருக்கிறார்கள். முதல் பாடத்திலேயேநாட்டில் நடக்கும் சில அவலங்களை மக்களுக்குச் சொல்லவேண்டும் அவற்றை நகைச்சுவை முலாம் பூசிச் சொல்லவேண்டும்.அதனால் அவை கூடுதலாக மக்களிடம் போய்ச் சேரும் என்று நம்பிப் பணியாற்றியிருக்கிறார்கள்.