தலைவர் தம்பி தலைமையில் வெற்றி விழாவில் ஜீவா நெகிழ்ச்சி

 

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி, கார்த்தி நடித்துள்ள வாவாத்தியார் என இரண்டு மெகாபட் ஜெட் படங்கள் வெளியாகியிருந்த நிலையில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதால் திடீர் என தலைவர் தம்பி தலைமையில் படத்தை தயாரிப்பாளர் வெளியிட்டார். முந்தைய இரண்டு படங்களும் வசூலில் தடுமாறிய நிலையில் தலைவர் தம்பி தலைமையில் படம் முதல் நாள் வசூல் குறைவாக இருந்த போதும் அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் படம் பார்க்க மக்கள் கூட்டம் பொங்கி வழிந்தது. பொங்கல் திரைப்படங்களில் குறைவான பட்ஜெட்டில்(6 கோடி) தயாரிக்கப்பட்ட இந்த படம் திரையரங்குகளில்முதலீட்டை போன்று ஏழு மடங்கு மொத்த வசூல் செய்து இந்த ஆண்டில் முதல் வெற்றி படமாக முத்திரை பதித்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பிரம்மாண்டமான விழா ஒன்றினை நடத்தினார்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா,“நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாகக் குமிளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இந்தப் படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் எங்களுக்காகக் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் ‘விஸ்வரூப வெற்றி’ அடையும் என்று வாழ்த்தினார்கள். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது, அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. இந்த வெற்றிக்கு அந்த மக்களின் அன்பும் ஒரு முக்கியக் காரணம்
இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் திறமையை வெளிக்கொண்டு வந்து, காட்சிகளை அவ்வப்போது மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் நிதேஷ் சாத்தியமாக்கியுள்ளார். நடிகர்
வி.டி.வி கணேஷ் தான் இந்தக் கதையை முதலில் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றோம். கதை பிடித்திருந்ததால், ‘படம் எப்போது வேண்டுமானாலும் பண்ணுங்கள்’ என்று கூறி அப்போதே அட்வான்ஸ் கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் இன்று வெற்றியாக மாறியுள்ளது. இந்தத் தருணங்கள் இனிமையான நினைவுகளாக மாறியுள்ளன” என நெகிழ்ந்தார்.