கிராமங்களில் சொல்லப்படும் பழங்கதைகள் உண்மையானவையா? என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் படங்களை எடுக்கும் குழுவினர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் சொல்லப்படும் ஏழு கன்னிகள் கதையை ஆவணமாக்க காட்டுக்குள் செல்கிறார்கள்.அங்கு என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்வதுதான் மர்மர் படம்.
ரிஷி கதாபாத்திரத்தில் ரிச்சி கபூர், மெல்வின் கதாபாத்திரத்தில் தேவ்ராஜ் ஆறுமுகம்,அங்கிதாவாக வரும் சுகன்யா ஷண்முகம்,காந்தாவாக நடித்திருக்கும் யுவிகா ராஜேந்திரன்,ஜெனிபர் வேடமேற்றிருக்கும் அரியா செல்வராஜ் ஆகியோர்தாம் படம் நெடுகப் பயணித்திருப்பவர்கள்.
அவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கும் தருணங்களை விட உயிர் பயம் பரவும் வகையில் அஞ்சிநடுங்கும் காட்சிகள்தாம் அதிகம்.அதை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஃபவுண்ட் ஃபுட்டேஜ் என்று சொல்லப்படும் ஒளிப்பதிவுக்கருவியின் நேரடிப் பதிவுகளை காட்சிகளாக்கும் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ்.அவருக்குக் கூடுதல் சவாலாக குறைந்த வெளிச்சத்திலேயே பெரும்பாலான காட்சிகள்இருக்கின்றன.
அவற்றையும் தெளிவாகக் காட்ட முயன்றிருக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசையமைப்பாளரே இல்லை.அப்புறம் எப்படி ரசிகர்களைப் பயப்படுத்துவதாம்.அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவர் ஒலி வடிவமைப்பாளர் கெவய்ன் பிரடெரிக்.அவரும் இயற்கை ஒலிகளைச் சரியாகப் பதிவு செய்து தேவைக்கேற்ப பயன்படுத்தி பயப்பட வைத்திருக்கிறார்.அதிலும் அமானுஷ்ய ஒலிகள் இடம்பெறும் காட்சிகள் அச்சத்தின் உச்சம்.
படத்தொகுப்பாளர் ரோகித்,காட்சிகளும் படமும் நீண்டு கொண்டே செல்வது போன்ற உணர்வைத் தவிர்க்க உழைக்கவில்லை.
இந்தப் படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்த நடிகர்களும் இயக்குநரின் சிந்தனையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்