DNA -திரைப்பட விமர்சனம்

பெண்அவளுடைய குணநலன் எப்படியிருந்தாலும் அவள்தாய்மை அடைகிற போது எப்படி இருப்பாள்? என்பதையும் ஒரு ஆண்மகன் எப்படியிருந்தாலும் தந்தையான பிறகு அவர் எப்படி நடந்துகொள்வார்? என்கிற திரைகதைக்குள்நாட்டில் நடக்கும் ஆபத்தான நிகழ்வுகளையும் இணைத்து எழுதப்பட்டிருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் டிஎன்ஏ.

காதல் தோல்வியால் மனமுடைந்து மதுவுக்குஅடிமையான அதர்வாவுக்கும் மாறுபட்ட குணம் கொண்டவர் என்பதால் பெண் பார்க்கும் படலத்தில் நிராகரிக்கப்படும் நாயகி நிமிஷா சஜயனுக்கும் திருமணம் நடக்கிறது.அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அதிர்ச்சி தரும் நிகழ்வு நடக்கிறது. அது என்ன? அதன் விளைவுகளென்ன? அதன் முடிவென்ன? என்கிற கேள்விகளுக்கான விடைதான்

DNAதிரைப்படம்

மதுவுக்கு அடிமையான இளைஞர் வேடம், பொறுப்பான கணவன் மற்றும் தந்தை வேடத்துக்கு ஏற்ப மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார் அதர்வா.முந்தைய படங்களிலிருந்து நடிப்பில் பன்மடங்கு முன்னேற்றம் இருக்கிறது.

நாயகி நிமிஷா சஜயன் நடிப்பில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.ஒரு சவாலான வேடத்தை ஏற்று அதற்கு நூறு விழுக்காடு நியாயமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா,சுப்பிரமணியம் சிவா,மானசா செள்த்ரி உள்ளிட்டோரும் அவரவர் வேடத்துக்கு ஏற்ப நடித்து படத்துக்கும் பலம் சேர்த்து அவர்களும் நற்பெயர் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் பார்த்திபன்,கதாபாத்திரங்களின் தன்மையை உயர்த்திக் காட்டியதுடன் கதை நடக்கும் சூழலையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

ஐந்து இசையமைப்பாளர்களின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒருவகை.ஜிப்ரானின் பின்னணி இசை இதயத்துடிப்பை இருமடங்காக்குகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன்.கதாநாயகன் கதாநாயகி ஆகியோரின் பாத்திரப்படைப்பை வேறுபடுத்திக் காட்டி, அதை மையக்கதையோடு உறுத்தலில்லாமல் பொருத்தும் கலையில் வெற்றி பெற்றிருக்கிறார்.அந்த அடிப்படை சரியாக அமைந்துவிட்டதால் ஒட்டுமொத்த திரைக்கதையும் விறுவிறுவெனப் போகிறது.

குழந்தைகள் விசயத்தில் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி அதிர்ச்சியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்.