ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கியுள்ளார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். இப்டத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதனையொட்டி
படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா நேற்றுமாலை(05.06.2026) சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்
இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…
“ ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார்.
இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளனர்.
‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். ”
நடிகர் கலையரசன் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.
இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன.
தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.
‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
நடிகர் விதார்த் பேசியதாவது…
“இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.
இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர்.
‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும்.