மதுரையை சேர்ந்த ஈசா, தடகளவிளையாட்டில் சாதனைகள் படைத்த இளைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஹபீபி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் தீவிர ஆர்வம் கொண்ட ஈசா, தமிழ்நாடு மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்திய அளவிலான பல்கலைக்கழகப் போட்டிகளிலும் பங்கேற்று இறுதிச்சுற்றை எட்டியுள்ளார்.
சினிமா துறையிலும் தனது பயணத்தைத் தொடங்கிய ஈசா, நடிகர் அமீர் நடிப்பில்இயக்குநர் ஆதம் பாவா இயக்கிய “உயிர் தமிழுக்கு” திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த முக்கியமான வாய்ப்பாக “ஹபீபி” திரைப்படம் அமைந்தது. இப்படத்தில் மூன்று வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஈசா, அதற்காக தனது உடல் எடையை கணிசமாக மாற்றியுள்ளார். கதாபாத்திரத் தேவைக்கேற்ப எடையைக் குறைத்து, பின்னர் சுமார் 20 கிலோ வரை அதிகரித்து, மீண்டும் குறைத்து நடித்துள்ள அவரது அர்ப்பணிப்பு, திரைப்படத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.