இரு முடிகட்டு- திரைப்பட விமர்சனம்

 

சில திரைப்படங்கள் மனித மனதின் இருண்ட பக்கங்களையோ அல்லது இந்தச் சமூகக் கட்டமைப்பில் உள்ள நிதர்சனமான உண்மைகளையோ எந்தவித சமரசமும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாகப் பதிவு செய்யும். அப்படிப் பதிவு செய்யும்போது, ஒரு பார்வையாளராக நமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் தாக்கமும் ஏற்படுவது இயல்புதான். அத்தகைய படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், நம்மை பல கேள்விகள் கேட்க வைத்துவிடுகின்றன. இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படம் அந்த அதிர்வலையை மிகச் சரியாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி நமக்குள் ஒரு தீயைப் பற்றவைத்ததுடன், ஒருவிதமான உண்மையான பயத்தைக் கொடுத்தது. அதற்குப் பிறகு ரவிதேஜாவின் ‘இருமுடி’ படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் அந்த பயத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளன. வழக்கமான ‘மாஸ்’ ஹீரோக்கள் அடியாட்களைப் பந்தாடும்போது நாம் கைதட்டுவோம். ஆனால், இதில் வரும் சண்டைக்காட்சிகள் யதார்த்தத்தின் வலியை உணர்த்தி, நமக்கு ஏற்படும் பயத்தை பலமடங்கு அதிகரிக்கின்றன.
இன்னமும் பழைய கதாநாயக பிம்பத்தை மட்டுமே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள், காலத்திற்கேற்ப இறங்கி வரவில்லை என்றால், அவர்களுக்கான தோல்வி அவர்களாலேயே எழுதப்படும். சமீபத்தில் வந்த மலையாளப் படங்களின் அசுர வெற்றியும், ‘பெரிய நடிகர்கள்’ என்ற பிம்பத்தை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு விழுந்த சவுக்கடியும் இதைத்தான் உணர்த்துகின்றன. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் ‘இருமுடி’ ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
தனிநபர்களின் கொடூரமான செயல்களுக்குப் பின்னால், இந்தச் சமூகக் கட்டமைப்பும் அதன் சீர்கேடுகளும் எந்த அளவுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதைப் படத்தின் கதைக்களம் தோலுரித்துக் காட்டுகிறது.
பெண்களுக்கான பாதுகாப்பு, அவர்களை இந்தச் சமூகம் நடத்தும் விதம், சில கேடுகெட்ட ஆண்களின் பார்வை ஆகியவற்றை இதுவரையிலான படங்கள் வெறும் வார்த்தைகளில் ‘மெசேஜ்’ ஆக மட்டுமே சொல்லி வந்தன. ஆனால், ‘இருமுடி’ அதை மிகவும் ரௌத்திரமாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறது.
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளும், ஒரு அமைப்பின் மீதும் சமூகத்தின் மீதும் நமக்கு ஏற்படும் நியாயமான கோபமும் இந்தக் கதாபாத்திரங்கள் வழியாகத் திரையில் வெளிப்படும்போது, அது நம்மை ஆழமாகப் பாதிக்கிறது.
அப்பா – மகள் பாசம், பின்னணியில் ஒலிக்கும் ஜி.வி. பிரகாஷின் மிரட்டலான இசை, மற்றும் சமூகத்தின் மிக முக்கியமான ஒரு கருத்தை எவ்வித சமரசமும் இன்றிப் பதிவு செய்த விதம் என அனைத்தும் சேர்ந்து படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன.