அர்ஜுன்தாஸ் நடித்துள்ள உளவியல் கிரைம் திரைப்படம் ‘ஜான்டோ’

பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ்  (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா (Shobu Yarlagadda), பிரசாத் தேவினேனி (Prasad Devineni) ஆகியோர் தயாரித்துள்ள ஜான் டோ படத்தில்அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் (Nicholas Chevaillier) இணைந்து படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 (Artist 404) கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணன் கவனித்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அஷ்வினி காலே பணியாற்றியுள்ளார்.
 சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe) வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்…
நடிகை அனுபமா பேசியதாவது
“‘ஜான் டோ’ மிகவும் முக்கியமான, ஆழமான உளவியல் கதைக்களத்தைக் கொண்ட திரைப்படம். இந்தப் படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குள் செல்லும்போது நீங்கள் ஒரு நபராக இருப்பீர்கள். ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிச்சயமாக இன்னொரு நபராக மாறியிருப்பீர்கள். அந்த அளவுக்கு இப்படம் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.
நடிகர் படவா கோபி பேசியதாவது:
“இந்தப் படத்தில் என்னுடைய குரலைப் பற்றிப் பேசுவதைவிட, இந்தப் படத்தின் குரலே அர்ஜுன் தாஸ் தான். அவருடைய ஆழமான குரல் தனித்துவமானது. நாங்கள் வாய்ஸ் ஓவர் பணிகளுக்குச் செல்லும்போதுகூட, ‘உங்கள் குரல் அர்ஜுன் தாஸ் மாதிரி இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவருடைய குரல் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு திறமையான கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.
இந்தப் படம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு உளவியல் போராட்டம் இருக்கிறது. கமல் சார் சொன்னதுபோல, கடவுள் பாதி, மிருகம் பாதி என்பதுதான் மனிதர்களின் இயல்பு. அந்த மனநிலையைப் படத்தில் வித்தியாசமாக அணுகியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் தலைப்பான ‘ஜான் டோ’ என்பதன் அர்த்தம் எனக்குத் தொடக்கத்தில் தெரியவில்லை. மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர்தான் ஜான் டோ; பெண் நோயாளியாக இருந்தால் ஜேன் டோ என்று குறிப்பிடுவார்கள் என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். அந்த அளவுக்கு வித்தியாசமான பெயரையும், கதைக்களத்தையும் கொண்ட இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கிய மதுமிதாவுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் பிரசாத் பேசியதாவது
“மதுமிதாவிடமிருந்து எங்களுக்கு ஒரு அற்புதமான கதைக்களம் கிடைத்தது. இதுவரை நான் பணியாற்றிய இயக்குநர்களிலேயே மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றக்கூடியவர். அவர் ஒரு சிறப்பான திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் எங்கள் குழுவினருடன் இணைந்து படத்தைப் பார்த்தேன். எங்களுடைய நிறுவனத்தின் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய முதல் படமாக மட்டுமல்லாமல், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களைத் தயாரிப்பதற்கான தொடக்கமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் இணைந்ததற்காக அர்ஜுன் தாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சந்துரு கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவர் மிகச்சிறந்த நடிகர். இப்போது அவர் ஒரு திறமையான ராப் கலைஞராகவும் இருக்கிறார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்களைப் பற்றி இயக்குநர் மதுமிதாவே பேசுவார் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எங்களுடைய கூட்டாளிகளான நெட்ஃபிளிக்ஸ்( ஓடிடி பங்குதாரர்), ஜீ தமிழ்(சாட்டிலைட் பங்குதாரர்), டிவோ மற்றும் இசைப் பங்குதாரர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஏஜிஎஸ் (AGS) நிறுவனத்துக்கும், அர்ச்சனா, ஐஸ்வர்யா மற்றும் ஏஜிஎஸ் (AGS)  குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தைத் தெலுங்கில் தயாரிப்பதா அல்லது தமிழில் தயாரிப்பதா என்ற குழப்பம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. எங்களுடைய பலம் தெலுங்குத் திரையுலகில் இருப்பதால் தெலுங்கில் தயாரிக்கலாம் என்று முதலில் நினைத்தோம். ஆனால், இந்தக் கதைக்கு மிகவும் அவசியமான உள்ளூர் கலாச்சாரப் பின்னணியும் இயல்புத்தன்மையும் தமிழில் படமாக்கும்போதுதான் சரியாக வெளிப்படும் என்பதை உணர்ந்தோம். அதே நேரத்தில் படத்தின் விநியோகம் குறித்த கவலையும் இருந்தது. ஏஜிஎஸ் (AGS) நிறுவனம் எங்களுடன் இணைந்ததால் இப்போது அந்தப் பொறுப்பு பாதுகாப்பான கைகளில் இருப்பதாக நம்புகிறேன். இத்தகைய மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது,*
“ இயக்குநர் மதுமிதா என்னிடம் கதையைப் படித்துப் பாருங்கள் என்றுதான் கூறினார். கதையைப் படித்துவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தேன். அதன்பிறகு இப்படத்தை ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அர்கா நிறுவனத்துடன் பணியாற்றுவது எனக்குப் பெருமையான விஷயம். எங்கள் படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தில் நடித்த நீரவ் மிகவும் அழகாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஜாராவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஸ்ருஷ்டி இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். குறிப்பாக, அவருக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சிங்க் சவுண்ட் முறையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது கிடைக்கும் நேரங்களில் வசனங்களைத் தொடர்ந்து பயிற்சி செய்து, ஒரே டேக்கில் சிறப்பாகப் பேசி முடிப்பார். சஞ்சனா இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். பிரீதா மேடம் எங்களுடைய ஒளிப்பதிவாளர். எந்த இடத்திற்குச் சென்றாலும் மிகவும் இயல்பாகப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார். தயாரிப்பு வடிவமைப்பாளர் அஷ்வினி மேடமும் அவரது குழுவினரும் படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொரு ஃபிரேமையும் சிறப்பாகக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். காஸ்ட்யூம் டிசைனர்களான பிரியா ஹரி மற்றும் பிரியா கரண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே தங்களுக்குள் புரிந்துகொண்டு பணியாற்றுவார்கள். அவர்களுடைய ஒருங்கிணைப்பு மிகவும் ஆச்சரியமானது. அதேபோல் அனு மேடம், அதுல் கிருஷ்ணா, ராஜேஷ், உதவி இயக்குநர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. படத்தொகுப்பாளர் விஜய் வெங்கடரமணன் அதிகம் பேசமாட்டார். ஆனால், அவருடைய பணி படத்தை மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறது.
அர்ச்சனா மேடம் இந்தப் படத்தில் என்னுடைய அம்மாவாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நினைவு இருக்கிறது. ‘கைதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்த முதல் விருது ஜீ விருது தான். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது அர்ச்சனா மேடம். அதன்பிறகு அவர் தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் எனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் அவரை என்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று அழைப்பேன். இந்தப் படத்திலும் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். இயக்குநர் மதுமிதாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆரம்பத்தில் அவரை மேடம் என்று அழைத்தாலும், எங்களுடைய நீண்ட பயணத்திற்குப் பிறகு இப்போது மதுமிதா என்று நட்புடன் அழைக்கிறேன். இதற்கு முன்பு ஒரு படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். அப்போது ஆடிஷன் செய்து அனுப்பினேன். அவர் அதைத் தேர்வு செய்ததாகத் தகவல் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ‘ஜான் டோ’ படத்திற்காக மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு இந்தக் கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறினார். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம். மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடன், முழுமையாகத் திரைப்படத்தைப்  பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் இயக்குநர். ஒரு பெண் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு ஒட்டுமொத்த படையையே வழிநடத்தும் ஒருவராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்குத் துணையாகத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு இசையமைத்த முஜீப் மஜீத் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னுடைய சகோதரி மாளவிகாவும் இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். குடும்பத்தினருக்காகப் பாடல் பாடுவதற்கு அவருடைய குரலைப் பரிசோதித்துப் பார்க்கும்படி மதுமிதாவிடம் கேட்டேன். அவர் ஆடிஷனில் தேர்வானது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை வழங்கும் ஏஜிஎஸ் (AGS) நிறுவனம், அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் நன்றி. நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், டிவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் மட்டுமல்ல; இதில் வலுவான உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லராகவும் இருக்கும். நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் மதுமிதா பேசியதாவது,
“‘ஜான் டோ’ திரைப்படத்தை ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருப்பது எங்களுக்குப் பெருமை. தயாரிப்பாளர்கள் ஷோபு, பிரசாத் மற்றும் அவர்களுடைய குழுவினர் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்தனர். என்னுடைய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு பகலாக உழைத்திருக்கிறார்கள்.
எந்த ஜானரில் திரைப்படம் உருவாக்கினாலும் மனித உணர்வுகள்தான் என்னுடைய படங்களின் முக்கிய அம்சமாக இருக்கும். ‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். கேரளா – தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள குறிஞ்சி மேடு என்ற மலைப்பிரதேசத்தில் கதை நடைபெறுகிறது. அர்ஜுன் தாஸ் கேரள காவல்துறை அதிகாரியாகவும், சஞ்சனா தமிழ்நாடு காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு அக்கா கிடைத்திருக்கிறார் என்றால் அது அர்ச்சனா மேடம்தான். அவர் எனக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் வழங்கிய சிவப்பு நிற டெடி பியருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சில குறைகள் இருந்தாலும் நான் போதுமா!? என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழும் , நாம் போதும்!!! என  உணர்த்துவதற்காக தான் அதை வழங்கினோம். ஒரு நல்ல கணவராக, மனைவியாக, குழந்தையாக, நடிகராக அல்லது தொழில்நுட்பக் கலைஞராக இருக்கிறோமா என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதற்கான பதில், நம்மிடம் குறைகள் இருந்தாலும் நாம் நம்முடைய இடத்தில் சிறந்தவர்கள்தான் என்பதுதான்.ஒரு இயக்குநருக்கான உண்மையான அங்கீகாரம் பார்வையாளர்களிடமிருந்துதான் கிடைக்கும். நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், திவோ மற்றும் ஏஜிஎஸ் போன்ற நிறுவனங்கள் படத்தைப் பார்த்துவிட்டு எங்களுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘ஜான் டோ’ திரைப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி என்றார்.
‘