காவல்துறை அதிகாரியாக சீமான் நடித்திருக்கும்’ அமீரா’ டீசர் வெளியானது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ஆர்.கே.சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘அமீரா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ரா.சுப்பிரமணியன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சீமான். “தமிழ்ச்செல்வன்” என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலை வழக்கில் குற்றவாளி எனக் கருதப்படும் நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தருகிறார் காவல்துறை அதிகாரி. ஆனால், சிறைத்தண்டனை முடிந்து வெளியே வரும் அந்த நபர் உண்மையான குற்றவாளி அல்ல என்பது அவருக்குத் தெரியவருகிறது.
தன்னால் நிரபராதி ஒருவர் தண்டிக்கப்பட்டதை உணர்ந்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அந்த அதிகாரி, உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறார். இதை மையமாக வைத்தே ‘அமீரா’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்
இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த ‘அமீரா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.