நிறம்- திரைப்பட விமர்சனம்

இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாகியிருக்கிறது நிறம் திரைப்படம்.

மருத்துவரான முகேன் ராவ் பணியாற்றும் மருத்துவமனையில் படித்து வருகிறார் நாயகியான ப்ரீத்தி அஸ்ராணி. சமூகத்தில் தவறு நடக்கும் போதெல்லாம் அதை வீடியோ எடுத்து கேள்வி கேட்கும் ப்ரீத்தா அதனாலேயே காணாமலும் போகிறார். அவர் எங்கு போனார்? என்ன ஆனார்? அவரை நாயகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே நிறம் திரைப்படத்தின் ஒருவரி கதை.

நாயகனாக நடித்திருக்கும்முகேன் அதற்குண்டான அழுத்தமான நடிப்பைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.அயோத்தி தொடங்கி அப்பா குட்டி வரை கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி வந்த பிரீத்தி எதன் அடிப்படையில் இக்கதையில் நுழைந்தார் என்பது புதிராகவே இருக்கிறது. அவரது நடிப்பும் பெரிய அளவு கை கொடுக்காதது ஏமாற்றம். பரிதாபங்கள் டிராவிட் மற்றும் சிலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வழக்கமான கதை என்றாலும் திரைக்கதையாக அதை சுவாரஸ்யத்துடன் கொடுக்க தவறி இருக்கிறது படக்குழு. முன்பின் காட்சிகளில் கதை சொல்வது, யாருடைய பார்வையிலிருந்து கதை நகருகிறது எனும் கேள்வி, எல்லாவற்றையும் வசனங்கள் வழியே கடத்தும் உத்தி ஆகியவை படத்திற்கு பலமாக இல்லை.

தேவையற்ற நேரத்தில் டாஸ்மாக்கில் குத்துபாடல் வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே அடுத்த பத்து நிமிடத்தில் காதல் பாடல் எட்டிப் பார்க்கிறது. இரண்டு மணி நேரத்தை நிரப்பித்தள்ள எடுத்து வைத்த காட்சிகளைப் பயன்படுத்தி இருக்கிறதா படக்குழு என்பது எண்ணத் தோன்றும் வகையில் அமைந்திருக்கிறது திரைக்கதை.

திடீரென வில்லன்களிடம் இருக்கும் ரவுடி நாயகனுக்கு உதவுவது, சம்பந்தமில்லாமல் வில்லனுக்கு மருத்துவமனை உரிமையாளர் பயப்படுவது என லாஜிக் மீறல்கள் வரிசை கட்டி நிற்பதால் படத்தை பார்ப்பதற்கான எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஒளிப்பதிவும், இசையும் கூட படத்தைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

வழக்கமான கதையைக் கூட வழக்கமான வகையில் கொடுக்க முடியாமல் தட்டு தடுமாறுகிறது நிறம்.